தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு ஏன்? - அண்ணாமலை விளக்கம்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் விஜய்க்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும் தமிழ்நாட்டிற்குள் மட்டும் இந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு சிஆர்பிஎஃப் வீரர்களுடன் Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இருக்கிறார்கள் கூட்டணியில் இல்லை என மத்திய அரசு பார்க்கவில்லை. அவருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என பல முகமைகள் கூறியிருக்கிறது. இதனால் மத்திய அரசு விஜய்க்கு பாதுகாப்பு தந்திருக்கிறது. தமிழ்நாடு அரசிடமும் இதுபோல பாதுகாப்பு பிரிவுகள் உள்ளது. ஆனால் ஏன் விஜய்க்கு பாதுகாப்பு தரவில்லை?
இதில் அரசியல் செய்ய நினைத்தால் அவர்களுக்கு அரசியல் அடிப்படை புரிதல் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. விஜய் பாஜகவை எதிர்க்கவில்லையா? நாங்கள் மக்களை மக்களாக பார்க்கிறோம் பாஜக அனுதாபி என்றெல்லாம் பார்பதில்லை. இந்தியாவில் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியுள்ளது”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.