“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்?” - அண்ணாமலை கேள்வி!
கள்ளக்குறிச்சி சம்பவத்தை விட பெரிய நிகழ்வு இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தில் எதுவும் நடக்கவில்லை எனவும், முதலமைச்சர் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்ட உயிரிழந்த விவகாரத்தில், திமுக அரசை கண்டித்து நேற்று மாலை 5 மணிக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்தனர்.
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ராம்நகரில் உள்ள திருமண மண்டபத்திற்கு அண்ணாமலை மற்றும் கைதாகியுள்ள பாஜகவினரை அடைத்துவைத்தனர்.
“தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு வரலாற்றில் இது முதல் முறை. திமுக பயப்படுகிறது. இதைப்பற்றி பேசக்கூடாது என நினைக்கிறது.
இதைப் பற்றி பேசும்போது திமுகவுக்கும் கள்ளச் சாராயத்திற்கும் உள்ள தொடர்பு வெளியே வந்து விடும் என அஞ்சுகிறது. தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களை விட டாஸ்மாக் கடைகள் அதிகம். இது திமுக அரசு நடத்தி இருக்ககூடிய கொலை. மதுவுக்கு அடிமையாகி கள்ளச்சாராயத்தின் பக்கம் வந்த 55 பேர் இறந்திருக்கிறார்கள். இன்று இந்தியாவின் முன்பு தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறது.
ஜனநாயகத்துக்கு எதிரான கட்சி திமுக. ஆளுநருக்கு தனிப்பட்ட முறையில் அழைத்து நான் புகார் தெரிவித்து இருக்கிறேன். எங்கள் கருத்து சுதந்திரத்தை பறிக்கக் கூடிய திமுக அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா? என்ற கருத்தையும் ஆளுநர் முன் வைக்க இருக்கிறோம். மருவூர் ராஜா ஒரு புகைப்படத்தில் செஞ்சி மஸ்தானுக்கு கேக் ஊட்டி கொண்டு இருக்கிறார்.
சென்னையில் நாய் செத்து விட்டால் பிரதமர் வரவேண்டும். கள்ளக்குறிச்சியில் 55 பேர் செத்துவிட்டார்கள். ஏன் முதலமைச்சர் செல்லவில்லை. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறோம். அந்த ஆணையம் உடனடியாக வரவேண்டும். கள்ளச்சாரத்தை கட்டுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும். இது விக்கிரவாண்டி தேர்தலில் எதிரொலிக்க வேண்டும் என்பது எங்களது ஆசை.
காவல்துறை என்னை தடுக்கவில்லை. ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு நடக்கூடாது. கருணாநாகராஜன் தலைமையில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்ற அனுமதியோடு மற்றொரு நாளில் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பின்னர் கைது செய்யப்பட்ட பாஜகவினர் விடுவிக்கப்பட்டனர்.