”என்எல்சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுடன் இணக்கம் ஏன்.?” - முதல்வருக்கு அன்புமணி கேள்வி!
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டார். பின் மேடையில் பேசிய அவர்,
”திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புவனகிரி, சேத்தியா தோப்பு, வீராணம் பகுதி காட்டுமன்னார்கோயில் பகுதி அத்தனையும் என்எல்சி நிலக்கரி சுரங்கமாக மாறும்.என்எல்சி மூன்றாவது சுரங்கம் வந்தால் புவனகிரி சேத்தியாதோப்பு வீராணம் உள்ளிட்ட மொத்த பகுதிகளும் பாதிக்கப்படும்.
வேளாண்துறை அமைச்சர் விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். ஆனால் தமிழக வேளாண் துறை அமைச்சர் என்எல்சி நிறுவனத்திற்கு விவசாயிகளை அச்சுறுத்தி காவல்துறையை ஏவி அவர் இல்லத்தை பிடுங்கி கொடுக்கிறார். தான் மத்திய அரசிற்கு எதிரானவன் என்று சொல்லும் முதலமைச்சர் மு ஸ்டாலின் என்எல்சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவது ஏன்?. விவசாய நிலங்களை அழித்துவிட்டால் நாம் சோற்றுக்கு பிச்சைதான் எடுக்க வேண்டும்.
தற்போது என்எல்சி தேவை கிடையாது. இன்று நீர் மூலமாகவும் காற்று மூலமாகவும் சூரிய ஒளியின் மூலமாகவும் நாம் மின்சாரத்தை பெற முடியும் அந்த அளவுக்கு அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளது. 400 மெகாவாட் மின்சாரத்திற்காக இவ்வளவு விளைநிலங்களை அடிப்பது நியாயமா? வேளாண் நிலங்களை பாதுகாக்க வேண்டிய வேளாண்துறை அமைச்சர் காவல்துறையை ஏவி விட்டு விவசாயிகளை மிரட்டி என்எல்சிக்காக நிலத்தை பிடுங்கக்கூடிய பணியை செய்கிறார்.
திமுக கட்சிக்காரர்களிடம் 7 மதுபான ஆலைகள் உள்ளது.திமுக வாக்குறுதி கொடுத்தது போல நிறைவேற்றி இருந்தால் பொதுமக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை மின்சார கட்டணம் குறையும். கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என கேட்டால் நாங்கள் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த போகிறோம். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் தான் இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என சொல்கிறார்கள்.மக்களின் பணத்தை எல்லாம் வீணாக்கி முதலமைச்சர் ஜெர்மனி இங்கிலாந்து என்று பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு எதற்காக ஜெர்மனி இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும்..அதிகாரிகளை அடைத்து தமிழ்நாட்டில் வைத்து கையெழுத்து போட்டு இருக்கலாமே? தற்போது போடப்பட்டுள்ள 15 ஆயிரத்து 500 கோடி ஒப்பந்தத்தில் விரிவாக்கத்திற்காக மட்டும் 90 சதவீதம் போடப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்திற்காக எதற்காக லண்டன் ஜெர்மனி செல்ல வேண்டும்? தமிழகத்தில் மணல் குவாரிகளில் 40 ஆயிரம் கோடிக்கு மேல் கடந்த ஆண்டில் வருமானம் பார்த்துள்ளனர்.
சமூக நீதிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உரிமை இல்லை என முதலமைச்சர் பொய் சொல்கிறார். தமிழகத்தில் இரண்டு மாதத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்து முடித்து விடலாம். சாதி வாரி கணக்கெடுப்பை எடுத்தால் தான் எந்தெந்த சமுதாய மக்கள் பின்தங்கிய நிலையில் இன்னும் இருக்கிறார்கள். எவ்வளவு பேர் அரசு பணிக்கு சென்று இருக்கிறார்கள் யார் யாருக்கு இன்னும் உதவிகள் தேவைப்படுகிறது உள்ளிட்ட அனைத்து தரவுகளும் கிடைக்கும்”
என பேசினார்