For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்னும் சிபிஐக்கு மாற்றப்படாதது ஏன்?” திமுக எம்பி வில்சன் கேள்வி!

04:49 PM Jun 19, 2024 IST | Web Editor
“நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்னும் சிபிஐக்கு மாற்றப்படாதது ஏன் ” திமுக எம்பி வில்சன் கேள்வி
Advertisement

“நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கு ஏன் இன்னும் சிபிஐக்கு மாற்றப்படவில்லை?” என திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement

நடப்பாண்டில் நடத்தி முடிக்கப்பட்ட  நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்,  தேர்வு வினாத்தாள் கசிவு,  கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது.  குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள்,  பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான்,  மகாராஷ்டிரா,  பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்தது தெரிய வந்துள்ளது.

இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மறுத்தேர்வுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வரும்நிலையில், வழக்கு ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படவில்லை என மூத்த வழக்கறிஞரும்,  மாநிலங்களவை திமுக எம்பியுமான வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“NEETUG2024 - தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் கிரிமினல் குற்றச்செயல்கள் என பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் நிலையிலும்,  மத்திய அரசானது இதுவரை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை.

பீகார் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்கள் ஏற்கனவே எஃப்ஐஆர் பதிவு செய்து மோசடிகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.  ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதில் இருக்கும் தாமதத்தின் காரணமாக,  எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாத அல்லது விசாரணை தொடங்கப்படாத பிற மாநிலங்களில் இது குற்றவாளிகள் ஆதாரங்களை அழித்திட வழிவகுக்கும்.  இந்த மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரியது.

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவும்,  மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதானும் ஏன் இந்த குற்றச் செயல்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்? வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் “தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019"-ல் திருத்தம் செய்வதன் மூலம் NEET மற்றும் EXIT தேர்வுகளை நீக்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிக்க வேண்டும்.

இந்த திருத்தமானது,  ஒவ்வொரு மாநிலங்களும் தனிப்பட்ட முறையில் அதன் மருத்துவ சேர்க்கை நடைமுறைகளை நிர்வகிக்க அனுமதிக்கும்.  மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2021 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிசீலிக்க வேண்டும்”

இவ்வாறு மாநிலங்களவை திமுக எம்பி வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement