”5 சதவீத ஜிஎஸ்டி விகிதமானது கடந்த 8 ஆண்டுகளாக ஏன் நியாயமானதாக இல்லை..?”- ப.சிதம்பரம் கேள்வி!
அண்மையில் டெல்லியில் கடந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5%,12%, 18% மற்றும் 28% என்று நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரியை இரண்டு அடுக்குகளாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 18% மற்றும் 28% ஆகிய வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5% மற்றும் 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பு வரும் 22 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பல்வேறு பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜிஎஸ்டி வரிவிகித குறைப்பை பல்வேறு எதிர்கட்சிகள் வரவேற்று இருந்தாலும் 8 ஆண்டுகள் தாமதாக இந்த வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், தற்போது 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிகிதம் நியானமானதென்றால் கடந்த 8 ஆண்டுகளாக ஏன் அது நியாய மானதாக இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
” 12 சதவீத ஜீஎஸ்டி வரி வரம்பில் இருந்த 99 சதவீத பொருட்கள் இப்போது 5 சதவீத வரி வரம்பில் உள்ளன என்று நிதியமைச்சர் பெருமைப்படுவது புரிந்துகொள்ள கூடியது. இந்த வரி விகிதங்களைக் குறைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒரு கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். 5 சதவீத ஜிஎஸ்டி விகிதம் தற்போது நியாயமான, சரியான ஜிஎஸ்டி விகிதம் என்றால், அது ஏன் 8 ஆண்டுகளுக்கு நியாயமானதாகவும் சரியானதாகவும் இல்லை?”
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.