Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் படுகொலை - தமிழ்நாடு அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்...

07:31 AM Jul 09, 2024 IST | Web Editor
Advertisement
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பிண்ணனி குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தமிழ்நாடு அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மாநிலத் தலைவருக்கே இப்படி ஒருநிலை என்றால் மக்களுக்கு என்ன நிலை என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இந்த கொலை தொடர்பாக அரசிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அவர் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே ஆம்ஸ்ட்ராங்க்கு  நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!
இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:
1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?
2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து, இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?
3. சமீப காலமாக தலித் மக்களுக்கும், தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம, நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
4. பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.
5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?
6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?
7. ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில் பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய் இத்தகைய கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும், ஒடுக்குதலுக்கு எதிராக  ஆர்ம்ஸ்ட்ராங் போல கிளெர்ந்தெழுகிறவர்களால் நாங்கள் பெற்ற எழுச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
முடிவாக, சிறுவயது முதலே அவரின் அன்பில் ஈர்க்கபட்டவன் நான். திரைத்துரையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் எந்நாளும் அக்கறை கொண்டு என்னை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பாதையில் எவ்வித சமரசமுமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரை இழப்பது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். இதை சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளுமே என்னை (எங்களை)வழிநடத்தும்.
ஜெய்பீம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Tags :
ArmstrongBSPDMKPa. RanjithTN GovtTN Police
Advertisement
Next Article