“பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது!” - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் ஒட்டும் மண் தான் ஒட்டும், தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இன்று (02.03.2024)தமிழக
நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக நிதித்துறை
அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
தமிழகத்திற்கு ஒவ்வொரு ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதிக்குள் பிரதமர் மோடி வந்து விடுகிறார். நான்கு நாட்களுக்கு ஒரு முறை கூட தமிழகம் வருகிறார். வட்டி வசூலிப்பவர் கூட தாமதமாக தான் வருவார். ஆனால் மோடி தமிழகத்திற்கு திருப்பி திருப்பி வருகிறார். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டியாக தமிழகம் அவருக்கு தெரிகிறதா? என்னதான் தரையில் புரண்டாலும் ஒட்டும் மண் தான் ஒட்டும் எனவே தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்று பாஜக மாநில
தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அவருக்கு ஒரு விவரத்தை தெரிவிக்க
கடமைப்பட்டுள்ளோம். ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு 30 சதவீதம் தான் மத்திய அரசு வழங்குகிறது மீதி 70 சதவீதம் தமிழக அரசு வழங்குகிறது. ஆக வீடு வழங்குவதாக கூறுவது மத்திய அரசு பணம் தமிழக அரசின் உடையது. யார் வீட்டு அப்பன் சொத்தில் யார் ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது இப்போது
புரிந்திருக்கும்.
தமிழகத்தில் நெல்லை தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தபோது பிரதமர் ஐந்து ரூபாயாவது நிவாரணமாக அளித்து இருந்தால் அவரை நான் வரவேற்று இருப்பேன். ஆனால் அவர் இப்போது வந்து நெல்லையில் உரையாற்றுகிறார். எதற்காக அவர் இப்போது வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் தமிழக நிதி அமைச்சராக நான் எப்படி அவரை வரவேற்பது? இவ்வாறு அவர் பேசினார்.