அரசியலுக்கு வந்தது ஏன்? #VineshPhogat விளக்கம்!
தான் அரசியலுக்கு வந்தது ஏன் என்று வினேஷ் போகத் விளக்கம் அளித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து தாய்நாடு திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹரியானா காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தீபேந்தர் ஹூடா அவரை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார். இதற்கிடையே, வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
முன்னதாக பாஜக முன்னாள் எம்.பியும், மல்யுத்த சம்மேலன தலைவராகவும் இருந்த பிரிஜ் பூஷன் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்தவிட நடவடிக்கையும் எடுக்கப்படாததால் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் வீரர்- வீராங்கனைகள் சுமார் 6 மாத காலமாக போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் வினேஷ் போகத் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை சுட்டிக்காட்டிய பிரிஜ் பூஷன் உள்ளிட்ட பாஜகவினர் அவர் நடத்திய போராட்டம் அரசியல் லாபத்திற்காகத்தான் என விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், தான் அரசியலுக்கு வந்தது ஏன்? என்று வினேஷ் போகத் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது, "அதிகாரத்தில் இல்லையென்றால் இங்கு எதுவும் செய்ய முடியாது. ஒலிம்பிக்கில் நூற்றுக்கணக்கான பதங்கங்களை வெல்லலாம். ஆனால் அது அரசியல் அதிகாரத்துக்கு ஈடாகாது. ஒரே இரவில் பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது மொத்த நாடும் முடங்கியது. இதுதான் அரசியல் அதிகாரத்தின் சக்தி. பிரிஜ் பூஷனும் அந்த அரசியல் அதிகாரத்தை வைத்துதான் தப்பித்து வருகிறார். ஒலிம்பிக்கில் இறுதிசுற்று வரை முன்னேறிய பின் எடை விஷயத்தில் 1 கிலோ வரை விலக்கு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள் பிரிவில் இது அவசியம். ஏனெனில் பெண்கள் உடலும் ஆண்கள் உடலும் ஒரே மாதிரியானது அல்ல."
இவ்வாறு வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.