Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மிக்ஜாம் புயல் நிவாரண தொகை ரூ.6000-ஐ ரொக்கமாக கொடுத்தது ஏன்? தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம்!

06:19 PM Jan 06, 2024 IST | Web Editor
Advertisement

வெள்ளத்தில் ஏடிஎம் கார்டுகள், வங்கி விவரங்களை மக்கள் தொலைத்திருக்கக் கூடும் என்பதால் நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டதாக, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரண தொகையை அதிகரித்து வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அரசு பிளீடர் முத்துகுமார் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரத்து 450 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக விடுவிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 15ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல, நிவாரண உதவிக்கோரி விண்ணப்பிக்கும், குடும்பங்களில் தோராயமாக 10 சதவீத குடும்பத்தினருக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 31 கோடியே 74 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, 23 லட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக, நிவாரண தொகை வழங்கபட்டுள்ளதாகவும், நிவாரணத் தொகை கோரி அளிக்கப்பட்டுள்ள 7 லட்சத்து 3 ஆயிரத்து 170 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வங்கி மூலம் நிவாரணத் தொகை டெபாசிட் செய்யப்படும் எனவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மழை, வெள்ளம் காரணமாக ஏடிஎம்கள் செயல்படாததாலும், பயனாளிகள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற தாமதமாகும் என்பதாலுல், மழை வெள்ளத்தில் வங்கி கணக்கு விவரங்கள், ஏ.டி.எம்களை தொலைந்திருக்கக் கூடும் என்பதாலும், நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லாமல், ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கபட்டதாகவும், மழை வெள்ளத்தால் பலியானவர்களுக்கான இழப்பீடு, பயிர் சேதத்திற்கான இழப்பீடு, கால்நடைகளுக்கான இழப்பீடு, சேதமடைந்த படகுகளுக்கான இழப்பீடுகளை அதிகரித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கி அமர்வு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags :
CycloneMadras High CourtMichaungnews7 tamilNews7 Tamil UpdatesReliefRelief Fundtamilnadu governmentTN Govt
Advertisement
Next Article