ஈரோடு கிழக்கு யாருக்கு? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை ஒட்டி எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் 'சீல்' உடைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.