“மக்கள் செல்வாக்கு யாருக்கு... 2026-ல் தெரியும்..!” - எடப்பாடி பழனிசாமி பேட்டி
மக்களின் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பது 2026 தேர்தலில் தெரிய வரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவச்சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 76 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :
“அனைத்து மகளிருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக ஆட்சி வந்தபிறகு மக்களுக்கு நிம்மதி இல்லை. கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு போதை கிடங்காக மாறிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்து இருக்கிறது. இதையெல்லாம் வைத்துக்கொண்டு நாட்டு மக்களை நலமா என்று கேட்பது சரியா?. இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி திமுக தான்.
தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்குள் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தெரிவிக்கப்படும். பாஜக உடன் கூட்டணி முடிவு என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. தொண்டர்களின் உணர்வு அது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது நிலைப்பாடு. கூட்டணி என்பது அந்தந்த தேர்தல் சமயத்தில் அமைப்பது. நாங்கள், எங்களுடைய கட்சியின் அடிப்படையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அடிப்படையில் தான் கூட்டணி வைத்து வருகிறோம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில் தமிழ்நாடு ஏற்றம் கண்டது. முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. அதிமுக ஆட்சியை பொருத்தவரை, மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும். மக்களின் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதை 2026 தேர்தலில் மக்கள் உணர்த்துவார்கள்.
இதையும் படியுங்கள் : மகளிர் தினம் : 76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்!
போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரை சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம். வரும் 12-ம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது.”
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.