யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம்? நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனை!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண தொகை அறிவித்துள்ள நிலையில், எந்தெந்த பகுதி மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்குவது என்பது குறித்து நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
அரசு தரப்பிலும், தன்னார்வலர்கள் தரப்பிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதோடு வெள்ள நீர் சூழந்துள்ள பகுதிகளில் சிக்கியிருப்போருக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக உணவு, குடிநீர் வழங்குவதோடு, படகுகள் வாயிலாக வெள்ளத்தில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 8,000, மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000, கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500, வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணம் ரூ.4,000, முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு ரூ.7.50 லட்சம், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.50,000, சேதமடைந்த வலைகளுக்கு ரூ.15,000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிவாரண அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் எந்தெந்த பகுதிகளுக்கு நிவாரணம் என்பது குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆலோசனையின் நிறைவில் திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது.