'மிஸ்டர் 360' பட்டம் யாருக்கு'? - அடுத்தது இவர் தான் என ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு!
கிரிக்கெட் உலகில் 'மிஸ்டர் 360' என்ற புனைப்பெயருக்குச் சொந்தக்காரரான தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ், ஒரு நேர்காணலில், தனக்குப் பிறகு அந்தப் பட்டத்துக்கு யார் தகுதியானவர் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள வீரர், இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ்.
"அடுத்து 'மிஸ்டர் 360' என்று அழைக்கப்பட வாய்ப்புள்ள வீரர் யார்?" என்று தொகுப்பாளர் கேட்டபோது, சற்று யோசித்த ஏபி டி வில்லியர்ஸ், "டெவால்ட் ப்ரீவிஸ்" என்று உடனடியாக பதிலளித்தார்.
"ப்ரீவிஸ் இளம் வீரராக இருந்தாலும், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை அடித்து விளையாடும் திறன் அவரிடம் உள்ளது. எனது இளம் வயதில் எப்படி சுதந்திரமாகப் பேட்டிங் செய்வேனோ, அதேபோல அவரும் பயமின்றி ஆடுகிறார். அனைத்து விதமான ஷாட்களையும் விளையாடும் திறனும், நெருக்கடியான சூழலிலும் அமைதியாகச் செயல்படும் மனநிலையும் அவரிடம் உள்ளது" என்று டி வில்லியர்ஸ் பாராட்டினார்.
டெவால்ட் ப்ரீவிஸ், 'குட்டி ஏபிடி' (Baby AB) என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.இவரும் ஏபி டி வில்லியர்ஸைப் போலவே, மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை அடித்து விளையாடும் திறன் கொண்டவர்.
குறிப்பாக, கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும், அவர் புதுமையான ஷாட்களை விளையாடுவதில் வல்லவர். தனது அதிரடியான ஆட்டத்தால், டெவால்ட் ப்ரீவிஸ் ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ளார்.
மேலும் அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை, டி20 போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்கள் அடித்த சாதனை உள்ளிட்ட பல சாதனைகள் இவரது பெயரில் உள்ளன.
ஏபி டி வில்லியர்ஸைப் போலவே, டெவால்ட் ப்ரீவிஸும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ப்ரீவிஸ், டி வில்லியர்ஸின் புகழுக்கு ஏற்ப ஒரு சிறந்த வீரராக உருவெடுப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.