For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது?" - அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
10:20 AM Oct 29, 2025 IST | Web Editor
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது     அன்புமணி ராமதாஸ் கேள்வி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு: யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய கொலை வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அடுத்தடுத்து திமுக அரசு முட்டுக்கட்டைகளை போடுவது கண்டிக்கத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே, அவரது கொலை வழக்கில் தமிழக காவல்துறை நடத்தி வரும் விசாரணை ஐயத்திற்கு இடமானதாகவே இருக்கிறது.

அவரது கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதை விட, உண்மைக் குற்றவாளிகளை பாதுகாப்பதில் தான் காவல்துறை தீவிரம் காட்டியது. உண்மைகள் வெளிவந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி ஆணையிட்டது.

https://x.com/draramadoss/status/1983381173859701104

அதைத் தாங்கிக் கொள்ள முடியாத தமிழக அரசு, உடனடியாக உச்சநீதிமன்றத்துக்கு சென்று சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செல்லும் என்று கடந்த 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்யவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் அரசு விரும்பினால், சிபிஐ விசாரணையை ஏற்றுக் கொண்டு, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

ஆனால், அதை செய்யாத திமுக அரசு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை நிறுத்தி வைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல்வாதிகள் சிலருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை பலிகடாக்களாக மாற்றி விசாரணை வளையம் விரிவடையாமல் தடுக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, சிபிஐ விசாரணையை தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்திருப்பது வரை திமுக அரசின் அனைத்து செயல்பாடுகளும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே உள்ளன. தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகள் தொடர்பான வழக்குகள் அடுத்தடுத்து சிபிஐ விசாரணைக்கும், சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு, நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு வழக்கு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழ்நாடு காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது. மக்களின் நம்பகத் தன்மையை இழந்து விட்ட தமிழக காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது.

எனவே, இந்த வழக்கில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதையும், உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்"

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement