தெலங்கானாவில் பி.ஆர்.எஸிடம் ஆட்சியைப் பறித்த காங்கிரஸ் - முதலமைச்சராகும் ரேவந்த் ரெட்டி... யார் இவர்...?
தெலங்கானாவில் காங்கிரசிடம் பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் நிலையில் முதலமைச்சராகும் ரேவந்த் ரெட்டி யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாடே ஆவலோடு எதிர்பார்க்கும் தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்தியா கூட்டணி உருவான பின் நடைபெற்ற முதல் தேர்தல் இது. இந்த 5 மாநிலங்களில் வெளியாகும் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என பல்வேறு தரப்பினரும் நம்புகின்றனர். இந்த நிலையில், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
தெலங்கானா
ஆந்திராவில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தெலங்கானாவில் நடைபெற்ற 3-வது சட்டப்பேரவை தேர்தல் இதுவாகும். மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெலங்கானா மாநில தேர்தல் முடிவு ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாரத ராஷ்டிர சமிதி 2-வது இடத்திற்கும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்த நிலையிலும் பாஜக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறத் தொடங்கியது. காங்கிரஸ் ஆட்சி வந்தால் அடுத்த முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரேவந்த் ரெட்டி யார்..? அவரது அரசியல் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- ரேவந்த் ரெட்டி தெலங்கானா மாநிலம் மெஹ்பூப்நகர் மாவட்டத்தில் உள்ள கொண்டரெட்டி பள்ளியில் 1969 ஆம் ஆண்டு பிறந்தார்.
- இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது.
- ரேவந்த் ரெட்டி தனது இளங்கலை படிப்பை ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைகழகத்தில் பயின்றார்.
- படிக்கும் காலத்திலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட அவர் பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP அமைப்பில் சில காலம் பணியாற்றினார்.
- அதன் பின் 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தேர்தல் அரசியலில் நுழைந்தார்.
- இதனைத் தொடர்ந்து 2007-ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றியும் பெற்றார்.
- பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து தன்னை தெலுங்கு தேசம் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
- தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக 2 முறை இருந்த அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
- காங்கிரஸில் நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறை பதவி வகித்துள்ளார்.
- இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில தலைவராக நியமிக்கப்பட்டார் ரேவந்த் ரெட்டி.
- பிஆர்எஸ் ஆட்சியில் எம்எல்ஏ - வுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் ஊழல் தடுப்பு போலீசாரால் ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் வெளியே வந்தார்.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் மிகத் தீவிரமாக பணியாற்றி காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளார்.