ஜே.என்.யூ தேர்தலில் வெற்றி பெற்ற தனஞ்ஜெய் யார்.? - முழு விவரம்
ஜவஹர்லால் நேரு பல்கலைகழக தேர்தலில் வெற்றி பெற்ற தனஞ்ஜெய் யார் அவரின் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் மட்டுமே கல்வி நிலையங்களில் மாணவர் சங்க தேர்தல்கள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சொற்ப எண்ணிக்கையில் சில கல்லூரிகளில் மட்டுமே நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள பல்கலைகழகங்களிலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடைபெறும் மாணவர் சங்க தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தேர்தல் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர் துணைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஜே.என்.யு-பல்கலைகழகத்தில் தேர்தல் நடைபெறுவதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
ஒரு மாநில தேர்தலை போன்று ஜே.என்.யு பல்கலைக்கழக தேர்தல் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளுடன் நடைபெற்றது. மார்ச் 22 ஆம் தேதி ஜே.என்.யு மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக எண்ணப்பட்டு நேற்று மாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜே.என்.யூ தேர்தல் முடிவுகளின்படி தலைவர், துணைத் தலைவர் செயலாளர், துணைச் செயலாளர் ஆகிய நான்கு முக்கிய பொறுப்புகளில் போட்டியிட்ட இந்திய மாணவர் சங்கம் மற்றும் இடதுசாரி அமைப்புகள் வெற்றி பெற்றன. ஏபிவிபி அமைப்பு போட்டியிட்ட நான்கிலும் தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் 7ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று மாணவர் தலைவராக தனஞ்ஜெய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜே.என்.யூ தலைவரான தனஞ்ஜெய் யார்..?
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற தனஞ்ஜெய் முனைவர் பட்ட ஆய்வு மாணவர். இவர் பீகார் மாநிலம் கயாவைச் சேர்ந்த மாணவராவார். இவர் அகில இந்திய மாணவர் மன்றம் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பெருமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் 1996ம் ஆண்டிற்கு பிறகு ஒரு பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.