இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போகும் அணி எது? ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் போட்டிக்கான ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17-வது சீசன், அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், 70 லீக் போட்டிகளின் முடிவில் 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இதனிடையே, இறுதிப்போட்டிக்கான முதல் குவாலிஃபயர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொண்டன.
இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வெளியேற்றி குவாலிஃபயர் 2 ஆட்டத்துக்கு முன்னேறியது.
இந்த நிலையில் குவாலிஃபயர் 2 ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.
இவ்விரு அணிகளும் இந்த சீசனில் லீக் சுற்றில் ஒரு முறை மோதியுள்ளன. இதில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் இந்த அணிகள் 19 முறை மோதியுள்ள நிலையில், ஹைதராபாத் அணி 10 முறை வெற்றிபெற்றுள்ளது.