இந்த வாரம் ரிலீஸான 4 படங்களில் எது டாப் ? Week endல் எந்த படம் பார்க்கலாம்?
இந்த வாரம் ஓஹோ எந்தன் பேபி, தேசிங்குராஜா 2, மிஸஸ் அண்ட் மிஸ்டர், மாயக்கூத்து ஆகிய 4 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த நிலையில் 4 திரைப்படங்களின் திரைவிமர்சனம் வெளியாகியுள்ளது.
ஓஹோ எந்தன் பேபி திரைவிமர்சனம் :
நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் ஓஹோ எந்தன் பேபி. இந்த படத்தை பைவ் ஸ்டார் படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். உதவி இயக்குனரான ருத்ரா, ஹீரோ விஷ்ணுவிஷாலிடம் தனது சொந்த காதல் அனுபவங்களையே கதையாக சொல்கிறார். தனது காதல் பிரேக்அப் ஆகிவிட்டது என்று கவலை படுகிறார். இந்த கதையே நல்லா இருக்கு. படமாக எடுக்கலாம். ஆனா, ஒரு கண்டிசன். மீண்டும் நீங்க உங்க காதலியை சந்திக்கணும். அப்ப, என்ன நடக்குது என்பதை மீதி கதையாக எழுதிட்டு வாங்க, நான் நடிக்கிறேன்’’ என்கிறார் விஷ்ணுவிஷால். வேறு வழியில்லாமல் காதலியை தேடிப்போகிறார் ஹீரோ. என்ன நடக்கிறது என்பது தான் ஓஹோ எந்தன் பேபி படத்தின் கதை.
இளைஞர்கள் ரசிக்க வேண்டும். கொண்டாட வேண்டும் என்ற தெளிவான கோணத்தில் இந்த படத்தை எடுத்து உள்ளார் இயக்குனர். அதனால் பெரும்பான்மையான காட்சிகள் புதியதாக, கலர்புல்லாக இருக்கிறது. ருத்ரா சம்பந்தப்பட்ட பள்ளி போர்ஷன் அவ்வளவு அழகாக இருக்கிறது. கல்லுாரி காதல், காதலியுடன் டூர், சண்டை ஆகியவை இன்னும் அழகு. முதல் படம் என்றாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ருத்ரா.
ஹீரோயின் மிதிலா பால்கர் ரொமான்ஸ் மற்றும் எமோஷனல் காட்சிகளில் நன்றாகவும் நடித்துள்ளார். விஷ்ணுவிஷால் அவராகவே வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள், பாடல் காட்சிகள் தரமாக உள்ளது. இயக்குனர் மிஷ்கினும் அவராகவே வருகிறார். படப்பிடிப்பில் அவர் கோபப்படுவது, கறார் இயக்குரனாக நடந்து கொள்வது ரசிக்க வைக்கிறது. ஹீரோவின் சித்தப்பாவாக கருணாகரன், அப்பாவாக விஜயசாரதி, ஹீரோ நண்பர்களாக நிர்மல், நிவாசினியும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இடைவேளைக்குபின் படம் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும், கிளைமாக்ஸ் கலகலவென முடிகிறது. ஜென் மார்ட்டின் இசை, பாடல்கள் படத்துக்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. இந்த படத்தை இளைஞர்கள் கொண்டாடுவார்கள். கொஞ்சம் வயதானவர்கள் பார்த்தால், அட நாம இப்படி வாழவில்லையே என்று பீல் பண்ணுவார்கள்.
மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைவிமர்சனம் :
நடிகை வனிதா விஜயகுமார் கதைநாயகியாக நடித்து, அவரே இயக்கி இருக்கும் படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம். அவர் மகள் ஜோவிகா இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். படத்தில் 40வயதான வனிதா, இப்போது நான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் காலம் கடந்தால், நான் அம்மா ஆக முடியாது என்று கணவர் ராபர்டை நச்சரிக்கிறார்.
அவரோ சில காரணங்களால் குழந்தை வேண்டாம் என்கிறார். ம்ஹூம் முடியவே முடியாது. நான் அம்மாவாகியே தீருவேன் என பல ரொமான்ஸ் முயற்சிகளை செய்கிறார் வனிதா. அவருக்கு குழந்தை உருவானதா என்பது தான் படக்கரு. கொஞ்சம் அடல்ட் கன்ட்ன்ட் என்பதால் குடும்பத்துடன் பார்ப்பது கஷ்டம். பாங்காக்கில் நடக்கும் கதை அவ்வளவு கலர்புல்லாக, ஜாலியாக நகர்கிறது,
வனிதாவின் நடிப்பு, ஏக்கம் ஓகே. ஆனால், அந்த கவர்ச்சிதான் செட்டாகவில்லை. ராபர்ட் நன்றாக நடித்து இருக்கிறார். வனிதாவுக்கு குழந்தை பிறக்க ஐடியா கொடுக்கும் ஆர்த்தி, அதை தடுக்கும் கணேஷ், அட்வைஸ் செய்யும் ஷகிலா அன்ட் டீம் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் பல காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை. இடைவேளைக்குபின் கதை பாங்காக்கில் இருந்து சித்துாருக்கு நகர்கிறது. அந்த காட்சிகள் சுமாராக உள்ளது. கிளைமாக்ஸ் எமோஷனலாக இருக்கிறது.
கிரண் ஆடும் ராத்திரி சிவராத்திரி ரீமிக்ஸ் பாடல் கலக்கல். ஸ்ரீகாந்த்தேவாவின் இசை பிளஸ்ஸாக அமைந்துள்ளது. ஆனாலும், அந்த மாதிரி காட்சிகள், அந்த மாதிரி டயலாக் கொஞ்சம் அதிகமாக இருப்பதும், திரைக்கதையில் விறுவிறுப்பு குறைவாக இருப்பதும் படத்துக்கு மைனஸ். கவர்ச்சியை குறைத்து கதையில், வசனங்களில் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக வந்து இருக்கும்.
தேசிங்குராஜா 2 திரைவிமர்சனம் :
எழில் இயக்கத்தில் நடிகர் விமல், பூஜிதா, புகழ், ரவிமரியா, மொட்ட ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ள படம் தேசிங்குராஜா 2. கூவத்துார் பாணியில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், முக்கிய புள்ளிகள் ஒரு ரிசார்ட்டில் ஆட்டம் போடுகிறார்கள். அந்த வீடியோ அடங்கிய டிஸ்க் காணாமல் போகிறது. அதை அமைச்சர் ரவிமரியா, இன்ஸ்பெக்டர்கள் விமல், போலீஸ் அதிகாரியான ஹீரோயின் பூஜிதா தேடுகிறார்கள்.
அந்த டிஸ்க் கண்டுபிடிக்கப்பட்டதா, என்பதுதான் படத்தின் கதை. படத்தில் புகழ், சாம்ஸ், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, மமிமிதா, வையாபுரி, சிங்கம்புலி என வரிசையாக காமெடியன்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். காமெடி செய்து கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால், அதில் பல காமெடி வொர்க் அவுட் ஆகவில்லை. சிரிப்பு வரவில்லை என்பது சோகம். விமல் ஹீரோ என்றாலும் பெரிதாக ஸ்கோர் பண்ணவில்லை. பெண் போலீஸ் கெட்டப்பில் வருகிறார் புகழ். அதுவும் படத்துக்கு பலனை தரவில்லை. போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட பல சீன்கள் போராக உள்ளது. படம் முழுக்க பல கேரக்டரில் பேசிக்கொண்டே, கத்தி கொண்டே இருப்பது மைனஸ் ஆக இருக்கிறது.
கதையில் புதுமை, திருப்பங்கள் இல்லை, வித்யாசாகர் இசை பரவாயில்லை ரகம். எழில் படங்களுக்கு ஒரு வித மரியாதை மவுசு இருக்கும். பிற்காலத்தில் அவர் இயக்கிய படங்களில் காமெடி இருக்கும். இதில் இரண்டும் மிஸ்சிங் என்றே கூறலாம்.
மாயக்கூத்து திரைவிமர்சனம் :
ஒரு எழுத்தாளர் தொடர்கதை எழுதுகிறார். அதில் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி 2 ஆயிரம் திருடியதாக சந்தேகப்படுகிறார் எஜமானி. இன்னொரு அத்தியாயத்தில் 50வது கொலையை செய்தே ஆக வேண்டும் என்று துடிக்கிறார் தாதா. வேறு அத்தியாயத்தில் நீட் தேர்வால் டாக்டர் ஆக முடியுமா என்று கவலைப்படுகிறார் ஒரு ஏழை விவசாயியின் மகள். இப்படி தொடர்கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும்போது, அந்த கதையில் வரும் வேலைக்காரி, எஜமானி, தாதா, விவசாயி மகள் ஆகியோர் உயிர் பெற்று, எழுத்தாளரின் நிஜ வாழ்க்கைக்கு வருகிறார்.
அவர் வீடு தேடி வந்து எங்களுக்கு இந்த பிரச்னை ஏன், நீங்க கதை மாற்றி எழுதுங்க என்று டார்ச்சர் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த கதையில் வரும் பல கேரக்டர்கள் எழுத்தாளரை துரத்த ஆரம்பிக்கிறார்கள். எழுத்தாளர் அவர்களிடம் இருந்து தப்பித்தாரா என்பது தான் மாயக்கூத்து கதை. ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன், ஐஸ்வர்யா, சாய்தீனா, டில்லி கணேஷ், மு.ராமசாமி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
அஞ்சனா அழகான இசையை தந்து இருக்கிறார். தமிழில் இப்படிப்பட்ட புனைவு கதை, அதில் சொல்லப்படும் விஷயங்கள், காட்சிகள் நகரும் விதம் புதுமை. அதை அருமையாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். அந்த கேரக்டர்கள் எழுத்தாளரை துரத்துவது, அவர் அவர்களுக்கு பயந்து ஒவ்வொரு இடங்களுக்கு செல்வது, அங்கு நடக்கும் விஷயங்கள் என கதையில் நிறைய திருப்பங்கள் உள்ளது. எழுத்தாளராக வரும் நாகராஜன், வேலைக்காரி ஐஸ்வர்யா, வில்லன் சாய்தீனா, எழுத்தாளர் மனைவி காயத்ரி நடிப்பு இயல்பாக இருக்கிறது.
சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார் மறைந்த டில்லி கணேஷ். சுந்தர்ராம்கிருஷ்ணன் கேமரா, நாகூரான் எடிட்டிங் படத்தை இன்னும் மெருகேற்றுகிறது. மாற்று சினிமா ஆர்வலர்களுக்கு, வழக்கமான சினிமா பார்த்து போரடித்தவர்களுக்கு இந்த கதை பிடிக்கும்
சிறப்பு செய்தியாளர்: மீனாட்சிசுந்தரம்