தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... எடப்பாடி பழனிசாமியின் கருத்து என்ன ..?
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் 1977 ஆம் ஆண்டு முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு, சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார் . மேலும் இன்று வரை 9 முறை அதிமுக எம்எல்ஏவாக இருந்துள்ளார். அதிலும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 8 முறை எம்எல்ஏவாக இருந்து சாதனை படைத்துள்ளார். 3 முறை அமைச்சராகவும் பதவியையும் அலங்கரித்துள்ளார். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த வந்த செங்கோட்டையன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்தார்.
அண்மை காலமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். அதுமட்டுமின்றி முத்துராமலிங்க தேவர் நினைவு நாளில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரோடு இணைந்து தோன்றினார். இதையடுத்து செங்கோட்டையனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
கடந்த இரண்டு நாட்களாக செங்கோட்டையன் தவெகவில் இணயவுள்ளார் என்று தகவல்கள் வெளியான நிலையில் நேற்று அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த சூழலில் இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். அவர் கட்சியின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் செங்கோட்டையனுக்கு ஈரோடு,கோவை,நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அவர் அதிமுகவில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல அவசியமில்லை... நன்றி வணக்கம்.." என்று கூறினார். முன்னதாக வேறொரு இடத்தில் பேசும்போது, 'தவெகவில் ஏன் இணைந்தார் என்று அவரிடம் கேளுங்கள், என்னை ஏன் கேட்கிறீர்கள்?' என்று கருத்து தெரிவித்தார்.