ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.மூர்த்தியின் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மழை வருவதற்கு 4 நாட்களுக்கு முன் எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் இந்த அளவிற்கு மழை வரும், வெள்ளம் வரும், விடாமல் மழை பெய்யும் என எச்சரிக்கை விடவில்லை. அவையெல்லாம் மீறி 47 வருடத்தில் காணாத ஒரு மழையை பார்த்தோம்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக. ஆட்சியில் இருந்த போதும் இப்படி பேரிடரை சந்திதுள்ளோம். இல்லாத போதும் சந்தித்துள்ளோம். ஆட்சியில் நான் இல்லாத போதும், பேரிடம் காலங்களில் எப்படி எல்லாம் நான் பாடுபட்டேன் என உங்களுக்கு தெரியும்.
2015-ல் வெள்ளம் வந்த போது முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தார். அப்போது செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து விட்டதாக எச்சரிக்கை விடப்பட்டது. அன்றைக்கு அதனை திறந்து விட அவரிடம் அனுமதி கேட்க வேண்டும். ஆனால் அந்த அனுமதியை கேட்க பல அதிகாரிகள் பயந்தார்கள். அப்படிப்பட்ட நிலையால் தான் நூற்றுக்கணக்கான மக்களை நாம் இழந்தோம்.
ஆனால் இப்போது வரலாறு காணாத மழையால், செம்பரம்பாக்கம் ஏரி நீரை திட்டமிட்டு திறந்து பாதுகாப்பாக சென்னையை மீட்ட அரசு தான் திமுக அரசு. அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என அத்தனை பேரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நின்றார்கள். அதனால் தான் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
2015-ல் அரசின் சார்பில் உதவி செய்கிறோம் என நிவாரணப் பொருட்களை பல ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதைக் கூட அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பி வைத்தார்கள். ஆனால் திமுக அப்படி இல்லை.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் யார், எங்கு பாதிக்கப்பட்டிருந்தாலும் ரூ.6000 நிவாரணம் உறுதியாக வழங்கப்படும். தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறி, அதனை செய்து வருகிறோமோ, அதே போல இதையும் செய்து முடிப்போம்.
இதையும் படியுங்கள் : தவறுதலாக சுட்டதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு - தலைமறைவான எஸ்.ஐ.-க்கு போலீசார் வலைவீச்சு
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய அரசு அதிகாரிகள், தமிழ்நாடு அரசு இந்த பாதிப்பை சாமர்த்தியமாக கையாண்டுள்ளது என மனதார பாராட்டி இருக்கிறார்கள். திமுக ஆட்சி பொறுப்பில் இல்லாத போதும் சரி, இருக்கின்ற போதும் சரி மக்களின் எல்லா சூழ்நிலையிலும் உடனிருக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.