“பாஜகவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான்!” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
பாஜகவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான். என்னைப் பற்றியே பேசி கொண்டிருக்கின்றனர் என்று திமுகவின் இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை என்சிஎம்எஸ் மைதானத்தில் திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியாவிலேயே கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய ஒரே கட்சி திமுகதான். திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி தான். நாட்டிலேயே இளைஞரணி என்பது முதன் முதலில் திமுகவில்தான் தொடங்கப்பட்டது. 2 மாதங்களுக்கு முன்பு மதுரையில் மாநாடு நடந்தது. ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு அந்த மாநாடே உதாரணம். மதுரையில் நடந்தது கேலிக்கூத்தான மாநாடு.
பாஜகவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான். என்னைப் பற்றியே பேசி கொண்டிருக்கின்றனர். நான் ஓர் அரங்கத்தில் பேசினேன். அதில், பிறப்பால் அனைவரும் சமம் என்று மட்டுமே பேசினேன். ஆனால், நான் பேசாததை பேசியதாக திரித்துக் கூறி வருகின்றனர். எங்கு போனாலும் திமுகவைப் பற்றி பேசுவதே அமித் ஷாவுக்கு வேலையாக உள்ளது. பொய்க் குற்றச்சாட்டுகளை சொல்வதில் அமித் ஷா வல்லவர். அதுபோல பிரதமரும் இதையே பேசி வருகிறார்.
ஒட்டுமொத்த தமிழகமும் கருணாநிதியின் குடும்பம்தான். தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் திமுகவினர்தான். திமுக ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திமுக அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களின் பசியைப் போக்கிய ஆட்சிதான் திமுக ஆட்சி. மாணவ சமுதாயத்தினருக்கு பல்வேறு நலத்திடங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டு குழந்தைகளின் பாதுகாவலராக திமுக அரசு உள்ளது.
மத்திய அரசு 9 வருடங்களில் செய்த ஊழல்களை சிஏஜி அறிக்கையில் அம்பலமாகிவிட்டது. மத்திய அரசால் பலன் அடைந்தது என்று பார்த்தால் அது அதானி குடும்பம் மட்டுமே. கார்ப்பரேட்களுக்கான ஆட்சியாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல் போன்று, 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
பின்னர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ரூ.1.25 கோடி நிதி, அமைச்சர் உதயநிதியிடம் வழங்கப்பட்டது. மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துகளை அவரிடம் கட்சியினர் வழங்கினர்.
பின்னர், அமலாக்கத் துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்துள்ளது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தெளிவான அறிக்கை இருப்பதால் அரசு சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று பதிலளித்தார்.