அம்பேத்கரை அமித்ஷா விமர்சித்த போது ஆளுநர் எங்கே போனார்? - கோவி.செழியன் கேள்வி!
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை எல்லாம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்ட ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவருக்கு 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இந்த வடுக்களை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல், வழக்கு போட்டு வென்ற தமிழக அரசுக்கு எதிராக வழக்கம் போல ஆளுநர் ஆர்.என்.ரவி. அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் அபத்தமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.
"சமூக நீதி குறித்துப் பேசும் இந்த மாநிலத்தில் செருப்பு போட்டுச் செல்வதற்காகவும், இரு சக்கர வாகனத்திற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்" என பச்சை பொய்யை சொல்லியிருக்கிறார் ஆளுநர். 'பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களில் பீகார் இரண்டாவது இடத்தில் இருக்கிறது' எனத் தேசியப் பட்டியல் சாதியினருக்கான ஆணையத்தின் (NCSC) தலைவர் விஜய் சாம்ப்லா 2023-ல் சொன்னார்.
ஆளுநர் அவர்களே உங்கள் சொந்த மாநிலத்தில் இப்படி அநீதி நடந்து கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டைப் பற்றிப் பேசலாமா? பீகாரில் பாஜக தயவில்தான் ஆட்சி நடக்கிறது. அதைக் கண்டித்துப் பேச முடியுமா!
அம்பேத்கரை பற்றியெல்லாம் உருகிப் பேசியிருக்கிறீர்கள். "அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதைத்தான் சனாதன தர்மம் கூறுகிறது" என சனாதனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக பேசிக் கொண்டிருக்கும் நீங்கள். சனாதனத்தை எதிர்த்த அம்பேத்கரை புகழ்வது பொருத்தமாகவா இருக்கிறது! சனாதனம் போதித்த சாதியால் ஏற்பட்ட இழிவுகளை அகற்றத்தானே அம்பேத்கர் போராடினார். இனிப்பும் உப்பு எப்படி ஒரே சுவை தர முடியும்? சனாதனத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே பட்டியலின மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே!
நாடு முழுவதும் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமைகளில் 97.7 விழுக்காடு வழக்குகள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில்தான் பதிவாகியிருக்கின்றன என மத்திய அரசின் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் குறித்த மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, நாடு முழுவதும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து 51ஆயிரத்து 656 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதில், 12 ஆயிரத்து 287 வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் பதிவாகியிருக்கிறது. இது, மொத்தம் பதிவானவற்றில் 23.78 விழுக்காடு ஆகும். உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தானில் 8 ஆயிரத்து 651 வழக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 7 ஆயிரத்து 732 வழக்குகளும் பீகாரில் ஆயிரத்து 799 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் ஒடிசாவில் 6.93 விழுக்காடும் மகாராஷ்டிராவில் 5.24 விழுக்காடும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த 6 மாநிலங்களில் மட்டும் 81 விழுக்காடு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆறு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. தமிழ்நாட்டில் 3 விழுக்காடு வழக்குகளே பதிவானது. நாட்டிலேயே பட்டியலின மக்களுக்கு அதிக அளவில் வன்முறைகளும் கொடுமைகளும் நடைபெறுவது பாஜக ஆளும் மாநிலங்களில்தான் என்பதை மத்திய அரசின் தரவுகளே சொல்கின்றன.
சாதிக் கொடுமைகளுக்கு அடிப்படையான மனுநீதியை உயர்த்திப் பிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, சாதிக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் சமூகநீதி மாநிலத்தில் நீலிக்கண்ணீர் சிந்துகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயக முறையில் செயலாற்றி வரும் மாநில அரசுக்குக் குடைச்சலைக் கொடுக்கிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதைப் போல் பட்டியலின மக்கள் மீது கரிசனத்தைக் கொட்டுகிறார்.
உங்களை ஆளுநராக நியமித்த மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை பற்றிச் சொன்னது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா! "இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது.
இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என அமித்ஷா நாடாளுமன்றத்தில் சொன்ன போது நாடு முழுவதும் கொந்தளிப்பு எழுந்தது. "அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல; அவர் பாரதத் தாயின் மகன்" என இன்றைக்குச் சொல்லும் ஆளுநர் அவர்களே...அமித்ஷா சொன்ன போது ராஜ்பவனின் தர்பார் மண்டபத்தில் ஒரு கண்டன கூட்டத்தை ஏன் நடத்தவில்லை?
அமித்ஷா சொல்வது போல உங்களுக்கும் அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டதா? ஆரியம் பேசும் நீங்கள் அம்பேத்கரை போற்றி பாடுகிறீர்கள். அம்பேத்கரை பற்றிப் பேசவோ திராவிடத்தைத் தூற்றவோ உங்களுக்கு உரிமை கிடையாது". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.