எங்கே போனார் சைதை துரைசாமியின் மகன்..? 4-வது நாளாக தேடுதல் பணி தீவிரம்...!
இமாச்சல பிரதேசத்தில் மாயமான, முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 4வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இமாச்சல பிரதேச மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) கார் ஒன்று கட்டுப்பாடை இழந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மீட்பு பணி நடைபெற்ற நிலையில், விபத்துக்குள்ளான கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த காரில் மூன்று பேர் பயணம் செய்ததாகவும். சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும் திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியும் அந்த காரில் தான் பயணம் செய்ததாகவும் கூறப்பட்டது. திரைப்படத்திற்கு லோகேஷன் பார்ப்பதற்காக வெற்றி துரைசாமி அவரது நண்பர் கோபிநாத் உடன் அங்கு சென்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், காணாமல் போன சைதை துரைசாமியின் மகனை தேசிய பேரிடா் மீட்பு படையினா் 4-வது நாளாக இன்றும் தேடி வருகின்றனா். ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர் காவல்துறையினர், தனியார் ஸ்கூபா நீச்சர் வீரர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்லஜ் நதியில் கடந்த 3 நாட்களாக தீவிரமாக தேடிய நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்டால் 2 நாட்கள் கழித்து பக்ரா நங்கல் அணை வழியாக வர வாய்ப்பிருப்பதால் இன்று அங்கு போலீசார், பேரிட மீட்பு படையினர், ராணுவத்தினர், தனியார் ஸ்கூபா டைவிங் பிரிவினர் மூலமாக தீவிரமாக தேடி வருகின்றனர்.
சட்லஜ் நதியிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் தற்போது தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில் விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து ஆறு செல்லும் பகுதிகள் முழுக்க தேடுதல் வேட்டையானது நடைபெற்று வருகிறது.