“தமிழ்நாடு வரும்போதெல்லாம் பிரதமர் திட்டங்களோடுதான் வருகிறார்” - இணையமைச்சர் எல்.முருகன்!
பிரதமர் எப்பொழுதெல்லாம் தமிழ்நாடு வருகிறாரோ அப்பொழுதெல்லாம் புதிய திட்டங்களோடுதான் வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சித் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய இணையமைச்சர் எல்.முருகன்,
பிரதமர் எப்பொழுதெல்லாம் தமிழ்நாடு வருகிறாரோ அப்பொழுதெல்லாம் புதிய திட்டங்களோதான் வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 11 லட்சம் கோடி கொடுத்திருக்கிறார்.
உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் தமிழர்களின் பாரம்பரியம், தமிழ் மொழியின் பெருமை, தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என தமிழின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்து செல்கிறார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் சார்பாக பிரதமரை வரவேற்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.