"எப்போது ஒரு கட்சி பலவீனப்படுகிறதோ அப்போது கூட்டணி ஆட்சி அமையும்" - திருமாவளவன்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பெரிய காவனம் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் மதன்குமார் தாயார் மறைந்த தங்கமணி திருவுருவப்படத்தை மாலை அணிவித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், "கூட்டணி ஆட்சி என்பது தற்போது உருவாகி இருக்கிறது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக 1977 ஆம் ஆண்டு டெல்லியில் ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியை உருவாக்கியது. ஆளும் கட்சி, ஆண்ட கட்சி பலவீனப்படும் போது கூட்டணி ஆட்சி முறை நடைமுறைக்கு வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி 1967ம் ஆண்டு திமுக ஆட்சியை கைப்பற்றியது. எம்ஜிஆர்க்கு பிறகு எதிர்க்கட்சியாகும் வாய்ப்பையும் காங்கிரஸ் நழுவவிட்டது. அதிமுகவும், திமுகவும் மக்களின் வாக்குகளை பெற்ற செல்வாக்கு மிக்க கட்சியாக விளங்குகிறது. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளில் எப்போது ஒரு கட்சி பலவீனப்படுகிறதோ அப்போது கூட்டணி ஆட்சி அமையும்.
கூட்டணி ஆட்சி தொடர்பான பேச்சு தற்போது நடக்கிறது. அதிமுக தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்து வருவதால் கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தயாராக உள்ளது போன்று தோற்றம் அல்லது கருத்துருவாக்கம் எழுந்துள்ளது. கூட்டணி ஆட்சி என்ற விவாதத்தை தொடங்கி வைத்த கட்சி விடுதலை சிறுத்தை கட்சி.
தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையினரின் அத்துமீரல்களை நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு மாநிலங்களிலும் பிரச்சனை ஜாதி மதத்தின் பெயரால் ஏற்படுகிறது. பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் மதத்தின் பெயரால் வெருப்பு அரசியலின் பெயரால் வன்முறைகள் நிகழ்கிறது. காவல்துறையின் அத்துமீறல்கள் தலை தூக்குகிறது, அது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் ஆட்சியில் இருப்பவர்கள் இதற்காக தனி கவனம் செலுத்த வேண்டும். கூட்டணி தேவை என்பதற்காக பலவீனமாக இருக்கலாம், ஆனால் கூட்டணி ஆட்சி தேவை என்கிற அளவிற்கு பலவீனப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.