#MonkeypoxVACCINE எப்போது கிடைக்கும்? இந்தியாவின் சீரம் நிறுவனம் கொடுத்த அப்டேட்!
ஒரு வருட காலத்திற்குள் குரங்கு அம்மைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதையடுத்து உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்ட்14-ல் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தது. இது உலகின் பல்வேறு நாடுகளில் கவலையை அதிகரிக்க செய்துள்ளது. இந்த நிலையில்தான், இந்திய மருத்துவ கவுன்சிலுடன் இணைக்கப்பட்ட விஆர்டிஎல் ஆய்வகங்கள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 116 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது. காங்கோவில் பரவத் தொடங்கிய பாதிப்பில் தற்போது மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி இருக்கிறது. இதுவரை 15,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவில் தற்போது பாதிப்பு இல்லை என்றாலும் உச்சகட்ட சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், குரங்கு அம்மை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா(SII) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “குரங்கு அம்மை பாதிப்புகள் காரணமாக அறிவிக்கப்பட்ட உலகளாவிய சுகாதார அவசரநிலையைக் கருத்தில் கொண்டு, சீரம் நிறுவனம் தற்போது இந்த நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது ஆபத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான உயிர்களுக்கு உதவும். இது தொடர்பாக ஒரு வருட காலத்திற்குள் பல புதுப்பிப்புகள் மற்றும் நேர்மறையான செய்திகளைப் பெறுவோம் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். கோவிட் 19 வைரஸுக்கான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை உருவாக்கியது இந்த நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.