கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் ?
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசு பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது.
மேலும் தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது.
வண்டலூர்- ஊரப்பாக்கம் புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையம், மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களுக்காக தாமதமானது.
இந்த சூழலில் ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு மே மாதம் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.