"பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது... ” - வாழை படத்தை பாராட்டிய முதலமைச்சர் #MKStalin!
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி என வாழை படத்தை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களிலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியிருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் கதை, மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியாகி 10 நாட்கள் க்டந்த நிலையில், முதல்நாள் போலவே வசூல் வேட்டையில் கலக்கி வருகிறது. குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தற்போதுவரை ரூ.16 கோடி வரை வசூல் செய்துள்ளது. வாழை திரைப்படத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கே வாழை படத்தை கண்டு களித்தார். இதனைத் தொடர்ந்து வாழை படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..
”உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை திரைப்படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்து வரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.