ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு எப்போது? - மல்லிகார்ஜுன கார்கே பதில்!
ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜுன் 1-ல் கடைசி கட்டமாக தேர்தல் நடக்கிறது.
தற்போதைய சூழலில் ரேபரேலி, அமேதி தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. பாஜவை பொறுத்தவரை அமேதியில் கடந்த முறை வென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல பிரியங்கா காந்தியை எதிர்த்து ரேபரேலியில் போட்டியிட முடியாது என பாஜ மேலிடத்திடம் அக்கட்சியின் எம்பியும் ராகுல் காந்தியின் சித்தப்பா மகனுமான வருண் காந்தி தெரிவித்துள்ளார். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது..
'அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் ஒரு சில நாள்களில் அறிவிக்கப்படுவர்'. ஊழல்வாதிகள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று பாஜக கூறுகிறது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளை சந்திப்பவர்கள் பாஜகவில் சேர்ந்தவுடன், மாநிலங்களவை அல்லது சட்டபேரவை உறுப்பினர்களாக ஆகிவிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் தொகுதியை மாற்றுவது குறித்து கேள்வி எழுப்புபவர்கள், முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், அத்வானியும் எத்தனை முறை தொகுதியை மாற்றினர் என்பதை முதலில் கூறவேண்டும். பொய்யர்களின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.