டோக்கன் கிடைக்காதவர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு எப்போது? - தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவல்!
டோக்கன் பெற்றவர்களுக்கு முழுமையாக வழங்கிய பிறகு, மற்ற அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு முன்னதாக அறிவித்தது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான ரொக்கத் தொகைப் பெற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்கள், வருமான வரி செலுத்துவோர் போன்ற பிரிவினரைத் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு ,ரூ.1000 பொங்கல் பரிசு கொடுக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டைப் போல அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000, அரிசி, சர்க்கரை, முழுக் கரும்பும் பொங்கல் தொகுப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நியாயவிலைக் கடையில் சுமார் 400 முதல் 500 அட்டைதாரர்களுக்கு மட்டுமே பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பரிசுத் தொகுப்பு புதன்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தங்களுக்குரிய நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.