“உனக்கு என்ன தம்பி பிரச்னை?” - ராஷ்மிகா உடனான வயது வித்தியாசம் குறித்து சல்மான் கான் பதில்!
ஏ.ஆர். முருகதாஸ் - சல்மான் கான் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் சிக்கந்தர். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சஜித் நதியத்வாலா தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணண் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற 30ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று(மார்ச்.23) மும்பையில் நடைபெற்றது. இதில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர் சல்மான் கானிடம், உங்களுக்கு ராஷ்மிகாவுக்கும் 31 வயது வித்தியாசம் உள்ளதா ? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சல்மான் பதிலளித்தபோது, “இதில் கதாநாயகிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, அவரது தந்தைக்கும் எந்த பிரச்னையும் இல்லாதபோது, உனக்கு என்ன தம்பி பிரச்னை? நடிப்பில் ராஷ்மிகாவின் அர்பணிப்பை பார்க்கும்போது எனது குழந்தை பருவம் நினைவுக்கு வரும். அந்தளவு அர்பணிப்புடன் செயல்படுவார்” இவ்வாறு அவர் கூறினார்.