காங்கிரஸின் தோல்விக்கு காரணம் என்ன?
4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி முகத்தோடு முன்னேறி வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றியை பதிவு செய்தாலும் மற்ற 3 மாநிலத்தில் தோல்வி முகத்துக்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்....
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்து வருகிறது. காங்கிரஸ் வரலாற்றில் 1980க்குப் பிறகு, இந்தி பெல்ட்டின் எந்த மாநிலத்திலும் சொந்த ஆட்சி இல்லாதது இதுவே முதல் முறையாகும். காங்கிரஸின் தோல்வி குறித்து பெரிய தலைவர்கள் மவுனம் காத்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸின் தோல்வி குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் 135 இடங்கள் கிடைக்கும் என்று ராகுல் காந்தியே கூறியிருந்தார். அதே நேரத்தில், பல கருத்துக்கணிப்புகளில், சத்தீஸ்கரில் காங்கிரஸின் வலுவான நிலை காட்டப்பட்டது.
காங்கிரஸ் வட்டாரங்களின்படி, கட்சி தோல்வியை மறுபரிசீலனை செய்து லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் . இருப்பினும், மறுஆய்வு விவகாரம் காங்கிரசுக்கு புதிதல்ல. இந்த முறையும் தோல்விக்கு மாநில தலைவர்களை விட காங்கிரஸ் மேலிடமே காரணம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
பிரசாரத்தில் காங்கிரஸ் குழப்பம்:
இந்தி பெல்ட் மாநிலங்களில் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் மேலிடத்தால், குறிப்பாக மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகிய இருவராலும் கோஷ்டி பூசலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அத்துடன் தேர்தலுக்கு முன், முதல்வர் முகத்தை அறிவிக்க வேண்டாம் என, கட்சி மேலிடம் முடிவு செய்தது. அதன் பின், கட்சி தனது முழு பிரசார உத்தியையும் மாற்ற வேண்டியதாயிற்று. சத்தீஸ்கரில் தேர்தலுக்கு முன், காங்கிரஸ், 'பூபேஷ் ஹை டூ பரோசா ஹை' என்ற பிரச்சாரத்தை நடத்தியது. இது, பலராலும் பாராட்டப்பட்டது.
ஆனால் கட்சி மேலிடத்தின் முடிவுக்குப் பிறகு இந்த முழக்கம் மாற்றப்பட்டது. 'காங்கிரஸ் ஹை தோ பரோசா ஹை' என்ற முழக்கத்துடன் அக்கட்சி தேர்தல் களத்தில் இறங்கியது. நேரம் குறைவாக இருந்ததால், இந்த கோஷம் மக்களை சென்றடையவில்லை.
ராஜஸ்தானில் கூட காங்கிரஸால் கோஷ்டிவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அசோக் கெலாட் ஆதரவு தலைவர்கள் பல இடங்களில் பிரசாரத்துக்கு செல்லவில்லை. இதில், டேனிஷ் அப்ரரின் சவாய் மாதோபூர் மற்றும் சேத்தன் துடியின் திண்ட்வானா தொகுதிகள் முக்கியமானவை.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோரின் கூட்டுப் பேரணியை காங்கிரஸ் தனித்தனியாக நடத்த முடியவில்லை.
2. வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்:
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில், தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன், பா.ஜ., வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் அதை செய்யவில்லை. காங்கிரஸ் சார்பில், கழகப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார், ஆனால் இந்தக் கூற்றும் பொய்யானது. காங்கிரஸில் வேட்புமனு தாக்கல் கடைசி நாட்கள் வரை, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பெரும் சலசலப்பு நிலவி வந்தது.
மத்திய பிரதேசத்தில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக திக்விஜய்க்கும், கமல்நாத்துக்கும் நேருக்கு நேர் போட்டி நிலவியது. ராஜஸ்தானில் கடைசி கட்ட வேட்பாளர் தேர்வின் போது காங்கிரஸ் தேர்தல் கமிட்டி கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியேறினார். வேட்பாளர் தேர்வு குறித்த செய்திகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில் இருந்த போதும், அது குறித்து காங்கிரஸ் மேலிடம் பொருட்படுத்தவில்லை என்பது அரசியல் நோக்கர்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
3. தேர்தல் நடக்கும் மாநிலங்களில் காங்கிரஸின் கண்காணிப்பு அமைப்பு பலவீனமாகவே இருந்தது.
தேர்தல்களைக் கண்காணிக்க மூத்த பார்வையாளர்களை காங்கிரஸ் நியமித்திருந்தது, ஆனால் அவர்கள் தேர்தல் வட்டாரத்தில் காணவில்லை. கெலாட் மற்றும் கமல்நாத் ஆகியோரை தவிர மற்றவர்கள் அனைவரும் பலவீனமானவர்கள் என அரசியல் வட்டாரங்கள் விமர்சித்தன. ராஜஸ்தானில் கட்சியின் பொறுப்பாளராக சுக்ஜிந்தர் ரந்தாவா நியமிக்கப்பட்டார். இவர் ரந்தாவா அசோக் கெலாட்டை விட மிகவும் இளையவர்.
கமல்நாத்தை விட மிகவும் இளையவரான சுர்ஜேவாலாவுக்கு மத்தியப் பிரதேசத்தின் தலைமைப் பொறுப்பையும் அக்கட்சி வழங்கியது. மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பியது. ஆனால் அதை கமல்நாத் ஏற்கவில்லை. கமல்நாத்துக்கு அழுத்தம் கொடுக்க உயர்நிலைக்குழு முற்றிலும் தவறிவிட்டது.
மேற்குறிப்பிட்ட இந்த காரணங்களோடு, பாஜக ஆட்சியில் விமர்சனத்துக்கு ஆளான விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் களப்பணியாற்ற தவறியதே இந்த தோல்விக்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.