“நான் என்ன கசாப்பு கடையா வச்சுருக்கேன்” - ‘பெரிய பாய்’ என தான் அழைக்கப்படுவது குறித்து ‘இசைப்புயல்’ கருத்து!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை ரசிகர்கள் செல்லமாக ‘பெரிய பாய்’ என அழைத்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகும் அவர் தொடர்பான பல வீடியோக்களில் இந்த ‘பெரிய பாய்’ என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும். இந்நிலையில் தான் இவ்வாறு அழைப்பதை விரும்பவில்லை என இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இதற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இப்படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ரகுமானை, நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பெரிய பாய் என்ற புனைப்பெயருடன் அழைத்தார்.
அப்போது, “பெரிய பாயா? வேணாம் அது எனக்கு புடிக்கல. சின்ன பாய், பெரிய பாய்-னு. நான் என்ன கசாப்பு கடையா வெச்சிருக்கேன்?” இந்த பெயர் பிடிக்கவில்லை என தொகுப்பாளினியிடம் கூறினார். இவரின் இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.