பிரதமர் மோடியை சந்தித்தால் உங்களுக்கும் அதானி அம்பானிக்கும் என்ன தொடர்பு? எனக் கேட்பேன் - டெல்லியில் ராகுல் காந்தி பேச்சு!
பிரதமர் மோடியை சந்தித்தால் உங்களுக்கும் அதானி அம்பானிக்கும் என்ன தொடர்பு? எனக் கேட்பேன் என டெல்லி தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத்தாக்கல் செய்ய மே-14 ஆம் தேதி இறுதி நாள் என்பதால், ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடுவோர் மே – 14ம் தேதி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் வருகிற மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் ஒரே நாளில் டெல்லியில் இன்று பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பேசியதாவது..
” மோடி அரசு தற்போது இருக்கக்கூடிய ஏழை எளிய, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான உரிமைகளை முழுவதும் மாற்ற நினைக்கிறது. ஆனால் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் அவர்களை பாதுக்காக்க நினைக்கிறது.
மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் உங்களுக்கு என்ன செய்தது? சாந்தினி சவுக் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு சின்ன கடைக்காவது ஏதாவது ஒரு நலன் செய்து இருக்கிறார்களா? மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மூலம் வணிகர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ரயில் சேவைகளை தனியார் மையமாக்கி உள்ளார் பிரதமர் மோடி.
மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து நிறுவனங்களையும் தனியார் மையமாக்கிவிட்டார். இதையெல்லாம் வெறும் 25 முதலாளிகளுக்காகவே மோடி செய்கிறார். பிரதமர் மோடியை பார்த்தால் அவரிடம் ஒரு கேள்வி கேட்பேன், உங்களுக்கும் அதானி அம்பானிக்கும் என்ன தொடர்பு? என்று நான் கேள்வி கேட்பேன்.
தேர்தல் பத்திரத்தின் மூலம் முதலாளிகளிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு பின்பு அவர்களுக்காக உதவிகளை செய்து வருகிறார் பிரதமர் மோடி. அமலாக்கத்துறை வருமானவரித்துறை போன்ற நிறுவனங்களை ஏவி சிலரிடம் பணம் பார்க்கிறார்கள். அவர்கள் பணம் கொடுத்தவுடன் அவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் மூடப்படுகிறது.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.