'டீசல்' படத்தின் கதை என்ன ?.. ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா ?.. நடிகர் ஹரிஷ் கல்யாண் பேட்டி..!
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் வெளியான 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' ஆகிய படங்கள் அடுத்தடுத்த வெற்றியடைந்துள்ளன. இதனை தொடர்ந்து இயக்குநர் சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ள 'டீசல்' படத்தில் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது. இதனால் 'டீசல்' படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் படங்களில் டீசலும் ஒன்று. இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ’டீசல்’ படம் பற்றியும் பார்க்கிங் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்தும் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியது ;
‘நான் நடித்த லப்பர் பந்து, பார்க்கிங் படங்கள் வெற்றி, அடுத்ததாக டீசல் வருகிறது. இந்த படமும் வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும். அது பெரிய விஷயம். தவிர, நான் சின்ன வயதில் ரஜினிகாந்த் உட்பட பலரின் படங்களை விசில் அடித்து பார்த்து இருக்கிறேன். இந்த தீபாவளிக்கு என் படம் வருகிறது என்பது கூடுதல் சந்தோஷம். இந்த படத்தின் தலைப்பு டீசல் என்றாலும், இது குரூடு ஆயில் அரசியலை பேசுகிறது. அந்த காலத்தில் சென்னை, மங்களூர், குஜராத், மும்பை போன்ற இடங்களில் துறைமுகம் அருகே கப்பலில் வரும் குரூடு ஆயிலை சுத்திகரிக்க, ஒரு பெரிய குழாய் மூலம் எடுத்து செல்வார்கள். அதை திட்டம் போட்டு திருடி பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டம். அந்த விஷயத்தை இதில் பேசியிருக்கிறோம். இப்போது அப்படி செய்ய முடியாது. குழாயின் உயரத்தை அதிகரித்துவிட்டார்கள், நவீன பாதுகாப்பு வசதிககள் வந்துவிட்டன. தவிர, குழாய் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை இருக்கிறது. ஆகவே டீசல் கதை 2014ல் முடிகிறது. நான் மீனவனாக வருகிறேன். இதற்கு முன்பு நடித்திராத கேரக்டர், ஆக்சன் கதை வேறு. பெரும்பாலான காட்சிகளில் கைலி கட்டிக்கொண்டு நடித்து இருக்கிறேன். போட் ஓட்ட, மீன் பிடிக்க கற்றேன்.போட் ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல என்பதை புரிந்துகொண்டேன். சென்னை, நாகை, பழவேற்காடு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
அந்த ஆயில் குழாய் சீன்களை செட்போட்டு எடுத்தோம். போலீசாக வினய் வருகிறார். விவேக் பிரசன்னா இன்னொரு வில்லன். மொத்தம் 4 வில்லன்கள். ஹீரோயின் அதுல்யா ரவிக்கு லாயர் வேடம். அதிகம் காதல் காட்சிகள் இல்லாவிட்டாலும், பாடல் ஹிட். அவர் கேரக்டர் இண்டர்வெலுக்குபின் பெரிய டுவிஸ்ட் தரும். குரூடு ஆயில் பின்னால் இவ்வளவு அரசியலா என படம் பார்த்துவிட்டு யோசிப்பீர்கள், நீங்கள் ஒவ்வொரு முறையும் டீசல், பெட்ரோல் போடும்போது இந்த படம் குறி்த்து சிந்தித்து பேசுவீர்கள். கலப்படம், அதிரடி, பணம் என பல விஷயங்களும் கதையில் பேசப்படுகிறது. எம்.எஸ்.பிரபு, ரிச்சர்டு நாதன் என 2பேர் ஒளிப்பதிவு செய்ய, ஷில்வா, ராஜசேகர் பைட் சீன் தந்து இருக்கிறார்கள். திபுநிணன்தாமஸ் இசையமைத்து இருக்கிறார். சிம்பு பாடிய தில்லுபாரு பாடல் ஹிட். காளிவெங்கட், கருணாஸ், மாறன், ரமேஷ்திலக், தங்கதுரைனு பல நடிகர்கள் இருக்காங்க. ஒரு உலகளாவிய பிரச்னையே எளிமையாக சொல்லியிருக்கிறோம்.
நான் நடித்த பார்க்கிங் படத்துக்கு 3விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சி. அதிலும் எம்.எஸ்.பாஸ்கருக்கு கிடைத்ததும், திரைக்கதைக்கு கிடைத்ததும் கூடுதல் மகிழ்ச்சி. 7 ஆண்டுகள் நிறைய ஆராய்ச்சி செய்து, நிறைய உழைத்து இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். படப்பிடிப்புக்கு மீனவ கிராமமக்கள் உதவி செய்து இருக்கிறார்கள்.