For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை என்ன? அன்புமணி ராமதாஸ் கேள்வி?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களின் வாயிலாக இதுவரை எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
10:59 AM Aug 12, 2025 IST | Web Editor
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களின் வாயிலாக இதுவரை எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை என்ன  அன்புமணி ராமதாஸ் கேள்வி
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளைத் திரட்டுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத் தொடக்கத்திலோ இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

கடந்த காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாடுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் படுதோல்வியடைந்து விட்ட நிலையில், மக்களின் வரிப் பணத்தை வீணடித்து இன்னொரு பயணம் தேவையா? என்ற வினாவுக்கு அவர் விடையளிக்க வேண்டும்.

எந்தவொரு மாநிலமும் தொழில் துறையில் வளர்ச்சி அடைந்தால் தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும்; வேலைவாய்ப்புகளை பெருக்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. ஆனால், புதிதாக எந்தவொரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு முன்பாக, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதேபோன்ற திட்டங்களால் ஏற்பட்ட பயன்கள் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

அதேபோல், விரைவில் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக அதற்கு முந்தைய வெளிநாட்டு பயணங்களின் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த நன்மைகள் என்ன? என்பது குறித்து ஆராய வேண்டும். கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 நாள் பயணமாக துபாய் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள நிறுவனங்களிடம் நடத்திய பேச்சுகளின் அடிப்படையில், லூலூ நிறுவனம் மூலம் ரூ.3500 கோடி, நோபுள் ஸ்டீல்ஸ் ரூ.1000 கோடி, ஒயிட் ஹவுஸ் ரூ.500 கோடி உட்பட மொத்தம் ரூ.6100 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த முதலீடுகளின் வாயிலாக 15,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

அதன்பின் 2023 ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலமைச்சர் மேற்கொண்ட பயணத்தில் ரூ.1342 கோடிக்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

2024ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் ஸ்பெயின் நாட்டில் 14 நாள்கள் பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2500 கோடி, எடிபன் நிறுவனம் ரூ. 540 கோடி, ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி என மொத்தம் ரூ. 3,440 கோடி தொழில் முதலீடுகள் கையெழுத்திடப் பட்டன. இதில் ஒரு ரூபாய் கூட இன்னும் வரவில்லை; அதனால் யாருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்கள் மொத்தம் 17 நாள்கள் பயணமாக சென்றார். இப்பயணத்தின் போது ரூ.7616 கோடிக்கும் முதலீடுகள் திரட்டப்பட்டதாகவும் அதன்மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், நடக்கவில்லை.

இதுவரை 4 கட்டங்களாக 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவற்றின் மூலம் மொத்தம் ரூ.18,498 கோடி முதலீடு கிடைக்கும்; ஸ்பெயின் தவிர்த்த பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் முதலீடுகளின் வாயிலாக மட்டும் 28,516 பேருக்கு முதலீடு கிடைக்கும் என்று கூறியிருந்தார். ஆனால், முதலமைச்சர் உறுதியளித்தவாறு எதுவும் நடக்கவில்லை என்பதால், கடந்த காலங்களில் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணங்களும் தோல்வியடைந்து விட்டதாகவே கருத வேண்டியுள்ளது.

அதுமட்டுமின்றி, உள்நாட்டில் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகளின் நிலையும் திருப்தியளிப்பதாக இல்லை. அண்மையில், தூத்துக்குடியில் நடத்தப்பட்ட மண்டல முதலீட்டாளர்கள் மாநாடு உள்பட கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், அவற்றின் மூலம் 32.78 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் 10% கூட தொழில் திட்டங்களாக மாற்றப்படவில்லை. 5 விழுக்காடு அளவுக்குக் கூட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

மேலும் தமிழக அரசு கூறும் தரவுகளின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 10.62 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆனால், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடு வெறும் ரூ.18,498 கோடி தான். இது மொத்தமாக கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களின் மதிப்பில் வெறும் 1.72% மட்டும் தான். தமிழக அரசு வெளியிட்ட தரவுகளின்படி பார்த்தாலும் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் வரிப்பணத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் படுதோல்வி என்பது உறுதியாகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை நியாயப்படுத்த வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது? முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களின் வாயிலாக எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது. இவற்றில் எவ்வளவு முதலீடுகள் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன? எவ்வளவு பேர் வேலை பெற்றுள்ளனர்? என்பது குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் வெளியிட வேண்டும். அதன்பிறகே முதலமைச்சர் ஸ்டாலின் எந்தவொரு நாட்டுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement