தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் 11.24% ஆக உயர்ந்ததற்கு காரணம் என்ன?
தமிழ்நாட்டில் 2019 மக்களவைத் தேர்தலை விட, 2024 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்ததற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) எண்ணப்பட்டன. இத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், அதிமுக - தேமுதிக அணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. அதே நேரம் பாஜகவின் கூட்டணி கட்சியான பாமக தருமபுரி தொகுதியில் முன்னிலையில் இருந்தது. ஆனால் இறுதியில் அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 21300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடின.
தமிழ்நாட்டில் பாஜக 11.24% (48,80,954) வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவைப் பொறுத்தவரையில் 2019-ல் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 3.62% வாக்குகளைப் பெற்றது. இம்முறை 4 மடங்கு அதிகமாக பாஜக 23 தொகுதிகளிலும், அத்துடன் TTV தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு 5.38% (22,01,564) வாக்குகள் பதிவாகின. ஆரணி - 46,383, தஞ்சை - 1,02,871, திருவண்ணாமலை - 38,639, நெல்லை - 62,209, கள்ளக்குறிச்சி - 50,179, தென்காசி - 92,116, திருச்சி - 1,00,818, அரக்கோணம் - 66,826, மயிலாடுதுறை - 69,030, விழுப்புரம் - 58,019, விருதுநகர் - 1,07,615, திண்டுக்கல் - 62,875, மதுரை - 85,747, தூத்துக்குடி - 76,866, சிவகங்கை - 1,22,534, கடலூர் - 44,865, சிதம்பரம் - 62,308, தருமபுரி - 53,655, தேனி - 1,44,050, ராமநாதபுரம் - 1,41,806, நாகை - 70307 உள்ளிட்ட 20 தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் மூன்றாம் இடத்தை பிடித்தது.
TTV தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைத்த காரணத்தால் மட்டுமே
2024 தேர்தலில் தமிழ்நாடு பாஜகவின் வாக்கு சதவீதம் 11.24% ஆக அதிகரித்துள்ளது. அதாவது கிட்டதட்ட அமமுக/அதிமுகவினரின் 6% சதவீத வாக்குகள் பாஜகவிற்கு சென்றுள்ளது. இதன் விளைவாக 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழ்நாட்டில் அதிகமாகியுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.