For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பூனையின் செயலால் உயிரிழந்த பெண்.... பூனைகளின் #Nature என்ன? ஏன் இப்படி நடந்து கொள்கின்றன?

04:49 PM Sep 23, 2024 IST | Web Editor
பூனையின் செயலால் உயிரிழந்த பெண்     பூனைகளின்  nature என்ன  ஏன் இப்படி நடந்து கொள்கின்றன
Advertisement

பூனையின் இயல்பான தன்மைகள் என்ன என்பதை பூனைகளை வளரப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமான ஒன்றாகும்.இது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

மனிதர்கள் தங்களுக்கென்று ஒரு துணை தேடும்போதெல்லாம் அது இயலாதபோது அந்த இடத்தை நிரப்பும் விதமாக வளர்ப்பு பிராணிகளை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். உலகம் முழுக்க பெரும்பாலான மக்கள் நாய் அல்லது பூனையைத்தான் அதிகமாக வளர்ப்பு பிராணியாக வளர்த்து வருகின்றனர். இது தவிர முயல், கிளி, புறா என ஒருவரது விருப்பத்தை பொறுத்து வளர்ப்பு பிராணிகளை தேர்ந்தெடுகின்றனர்.

வளரப்பு பிராணிகள் நமது பேச்சைக் கேட்கும், நமது தனிமையை அகற்றும், நம் மீது யாரேனும் சண்டைக்கு வந்தாலோ அவர்களிடத்தில் சண்டைக்கு செல்லும். ஆனால் வளர்ப்பு பிராணிகளுக்கு வேறொரு தன்மையும் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சம்பவம்தான் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ளது.

பொள்ளாச்சி நேரு நகரைச் சார்ந்த ரவி, சாந்தி தம்பதியினர் தங்களது வீட்டில் ஒரு பூனையை வளர்த்து வந்தனர். ஒருநாள் வீட்டின் அருகே கட்டு விரியான் பாம்பு வந்ததை கண்ட பூனை அதனை வாயில் கவ்விக் கொண்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் போட்டுவிட்டு சென்றுவிட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்த அறையில் சாந்தி தூங்கிக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பாம்பு அவரைக் கொத்தியதால் அவர் அலறித் துடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் பலனில்லை. சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். வளர்ப்பு பூனையே வினையாக வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பூனை ஏன் அப்படிச் செய்தது..? பூனைகளின் இயல்பான தன்மைகளை புரிந்துக் கொண்டுதான் நாம் அதனை வளர்க்கிறோமா? ஒரு பிராணியை வளர்க்கும்போது அவற்றின் இயல்பான தன்மையை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பூனைகளின் இயல்புதான் என்ன?

பொதுவாக பூனை தன்னை வளர்க்கும் மனிதர்களை சுத்தம் செய்து கொள்ளத் தெரியாத மற்றும் வேட்டையாடத் தெரியாத பெரிய பூனைகளாகவே பார்க்கும் தன்மை கொண்டது. ஆகவே தான் பூனைகள் மனிதர்களுக்கு சுத்தம் செய்யவும், வேட்டையாடவும் கற்றுக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு தான் வேட்டையாடிய மிருகத்தை பாதி உயிருடன் வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறது. அதனை நம்மிடம் காண்பிக்கவும் செய்கிறது.

பூனைகளிடம் இதனைக் கவனித்திருக்கிறீர்களா? நமது வீட்டில் சுற்றித் திரியும் பல்லி, எலி போன்ற பிராணிகளை பூனை பிடித்துவிட்டால் போதும். உடனே அதனை கொல்லவும் செய்யாது.., அதனை உண்ணவும் செய்யாது.., பாதி உயிருடன் ஓடவிடும்.. திரும்பவும் துரத்தி பிடிக்கும்.., அதனை நம்மிடம் காண்பிக்கவும் செய்யவும். நமது வீட்டில் குழந்தைகள் இருந்தால் பூனைக்கு இருப்பு கொள்ளாது. அவர்களுக்கு வேட்டையாட கற்றுக் கொடுத்தே தீர வேண்டும் என்கிற முனைப்பில் பிடிபட்ட பிராணிகளை டார்ச்சர் செய்யும்.

எனவே பூனை வளர்க்கும்போது நாம் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் பூனைக்கு வீட்டுக்குள்ளே உணவே வைக்கக்கூடாது. உணவை வீட்டிற்கு வெளியே வைத்தாலும் எல்லா நேரங்களிலும் அதற்கு உணவு வைத்துக் கொண்டு இருக்கக் கூடாது. உணவை ஒரு குறிப்பிட்ட நேரம் என கணக்கிட்டுத்தான் வைக்க வேண்டும்.

பூனைக்கு உணவு வைக்கும் போது எப்போதும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் உணவை வைக்க வேண்டும். அப்போது தான் பூனைக்கு வேட்டையாடி உண்ணும் பழக்கம் இங்கே இல்லை என்பது புரிய வரும். பூனைகள் இயல்பாகவே புலியை போல இரவில் வேட்டையாடும் தன்மை கொண்டவை. எனவே இரவில் எதையாவது வீட்டுக்குள்ளே தூக்கி வரும் வாய்ப்பு உள்ளது. பூனைகள் இரவில் வேட்டையாடுவதால் நம்மால் அதனை கவனிப்பது பெரும் சிரமம்.

பொதுவாக செல்லப் பிராணியான நாயை பழக்குவதை போல பூனையை பழக்க முடியாது. பூனையை நீங்கள் அடித்தாலோ, மிரட்டினாலோ பூனைக்கு எதுவும் புரியாது. அதிகார சண்டை என்று நினைத்து நம்மிடம் திரும்ப சண்டையிடும். பூனைகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைகள் போல் அறிவு இருக்கும் என விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள். அதனால், அதை திட்டியோ அடித்தோ பலனில்லை. பாசம் காட்டினாலும் நாம் அதற்கு சக பெரிய பூனை என்று தான் புரியும். வளர்ப்பவர்களை நாக்கால் நக்கி சுத்தம் செய்துவிடுவதும் இதனால் தான்.

பூனைகளை ஜோடி அல்லது துணை இல்லாமல் தனித்து வளர்த்தால் கடிக்க யாருமில்லாததால் வளர்ப்பவர்களையே கடிக்கும். எனவே ஜோடியாக அல்லது இரண்டு மூன்று பூனைகளாக வளர்ப்பதே நல்லது. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்க்கனுமா என நீங்கள் கேட்கலாம்.. பூனைகளின் இயல்பு தெரியாமல் வளர்ப்பது உங்களுக்குத்தான் வினையாக முடியும்.

நாம் வளர்க்கும் எந்த வளரப்பு பிராணியும் நம்முடனே வாழ்ந்து நம்முடன் தான் மரணிக்கின்றன. ஆனால் பூனை மட்டும் தான் திரும்பவும் காட்டிலே போய் காட்டுவிலங்காக வாழும் திறன் உடையது. இதனை பெரல் கேட் என சொல்லுவார்கள். நாய்களால், பசுக்களால் ,ஆடுகளால் வீட்டு விலங்காக இருந்துவிட்டு அப்படி காட்டில் போய் வாழ முடியாது. எனவேதான் பூனை வீட்டு விலங்கு அல்ல எனவும் சொல்வதுண்டு. அதாவது பூனை நம்மோடு வாழ்கிறது அவ்வளவுதான் ஆனால் அது வளர்ப்பு பிராணி அல்ல.

எனவே பூனையை வளர்ப்பதற்கு முன்பு அதன் இயல்புகளை தெரிந்துகொண்டு வளர்ப்பது பூனைக்கும் நல்லது நமக்கும் நல்லது. மியாவ்..

ச.அகமது

Tags :
Advertisement