Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காவிரி தண்ணீரை விவசாயிகளிடம் சேர்ப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்? எடப்பாடி பழனிசாமி!

உரிய முறையில் தண்ணீரைக் கொண்டு சென்று விவசாயிகளிடம் சேர்ப்பதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
01:49 PM Jul 03, 2025 IST | Web Editor
உரிய முறையில் தண்ணீரைக் கொண்டு சென்று விவசாயிகளிடம் சேர்ப்பதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பகுதிகளில் உள்ள பாசனக் கால்வாய்கள் முறையாக தூர் வாரப்பட்டு, ஜூன் மாதம் 12-ஆம் தேதியன்று, மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் கடைமடை பகுதிகளைச் சென்றடையும்.

Advertisement

இந்த ஆண்டு காவிரி படுகைகளில் எந்தவித தூர்வாரும் பணிகளையும் செய்யாமல், வீண் ஜம்பத்திற்காகவும், வெற்று விளம்பரத்திற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்தி ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டார். அந்தத் தண்ணீர் காவிரி படுகை முழுவதும் தடையின்றி பயணம் செய்து கடைமடை வரைச் செல்லும் நிலை உள்ளதா என்பதை சிந்தித்துப் பார்க்காமல் மு.க.ஸ்டாலின் செயல்பட்டது டெல்டா பாசன விவசாயிகளைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் டெல்டா மாவட்ட கடைமடை பகுதிகளுக்குக் காவிரி தண்ணீர் சென்றடையாமல், கடைமடை விவசாயிகள் நடவுப் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஒன்றியங்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியங்கள்; தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் ஒன்றியங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு இன்னும் காவிரி தண்ணீர் சென்று சேரவில்லை.

விவசாயிகளின் வேதனைக் குரல் காதில் விழாத அளவிற்கு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். கடல் முகத்துவாரங்களில் வெங்காயத் தாமரை புதராக மண்டிக் கிடப்பதால் விவசாயிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். பாசன மதகுகள் மற்றும் கதவணைகள் பழுதுபார்க்கப்படாததால் பாசன நீரைத் தேவைக்கேற்ப திறக்க முடியவில்லை. ஆசிய வளர்ச்சி வங்கி, கடல் முகத்துவார சீரமைப்புக்காக வழங்கும் நிதியைப் பெற நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியாளர்கள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

திமுக ஆட்சியில், டெல்டா பாசன விவசாயிகள் இந்த ஆண்டு முழு அளவில் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையை ஏற்படுத்திய திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கடலில் கலக்கும் இச்சூழ்நிலையில், ஏன் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. உரிய முறையில் தண்ணீரைக் கொண்டு சென்று விவசாயிகளிடம் சேர்ப்பதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல்? கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததால், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் உடனடியாக தடையில்லாமல் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
cauvery waterDMKedappadi palaniswamifarmersgovernmentMKStalinTNGovernment
Advertisement
Next Article