மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன? மாநிலங்களவையில் வில்சன் கேள்வி!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதி குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர், “மதுரை, எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை மற்றும் எதிர்பார்க்கப்படும் முடிவின் விவரங்கள் என்ன? நீண்ட கால தாமதம் காரணமாக அரசாங்கத்திற்கு ஏதேனும் கூடுதல் செலவு ஏற்பட்டதா, அவ்வாறு இல்லையெனில், திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டில் ரூ.700 கோடியை அதிகரிப்பதற்கான காரணங்கள் மற்றும் அக். 31-ம் தேதி அரசு மற்றும் JICA மூலம் வெளியிடப்பட்ட நிதி விவரங்கள் என்ன?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் கூறியதாவது,
“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு, எல்லைச் சுவர் கட்டுவது உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது. முதன்மை பணிகளுக்கான டெண்டர், தகுதி பெற்ற ஏலதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள தற்காலிக வளாகத்தில் 50 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் வகுப்புகள் ஏப்ரல் 2022 முதல் தொடங்கப்பட்டுள்ளன. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) கையெழுத்திட்ட கடன் ஒப்பந்தத்தின்படி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க அக்டோபர் 2026 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திட்ட மதிப்பீடுகள் ரூ. 1264 கோடியில் இருந்து ரூ. 1977.8 கோடியாக அதிகரிப்பதற்கு, முக்கியமாக தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் மருத்துவமனை, கல்வித் தொகுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகள், ஏற்கனவே கட்டப்பட்ட பகுதிகளில் அதிகரிக்கப்பட்டதே காரணமாகும். இந்த திட்டத்தின் முன் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு 12.35 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.”
இவ்வாறு பதிலளித்துள்ளார்.