For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடங்கியிருச்சு பொதுத்தேர்வு... மனநல மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன?

10:34 AM Mar 01, 2024 IST | Jeni
தொடங்கியிருச்சு பொதுத்தேர்வு    மனநல மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன
Advertisement

பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில்,  மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள்,  ஆலோசகர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.... 

Advertisement

பொதுத்தேர்வுகள் வந்துவிட்டன.  தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு 2023 - 2024ம் கல்வியாண்டின் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது.  அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது.  மார்ச் 22ம் தேதி வரை நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள்,  மே 6-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

அதேபோல்,  10-ம் வகுப்புக்கு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரையிலும்,  11-ம் வகுப்புக்கும் மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.  மே 10ம் தேதி பத்தாம் வகுப்புக்கும், மே 14ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.பொதுத்தேர்வு காலம் என்பதால் மாணவர்களிடத்தில் ஒருவித பதற்றமும்,  பயமும் ஏற்படுவது வழக்கம்.  மன அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கும்.  11ம் வகுப்பு மாணவர்களுடன் ஒப்பிடும் போது,  10ம் வகுப்பு மாணவர்களும்,  12ம் வகுப்பு மாணவர்களுமே பெரும்பான்மையாக பதற்றத்துடன் காணப்படுவர்.  காரணம் அடுத்தக்கட்ட பயணத்திற்கு தயாராக வேண்டும் என்ற சூழல்.  அதிக மதிப்பெண்கள் பெற்றால் தான்,  தன்னுடைய கனவை நோக்கி ஓட முடியும் என்ற அழுத்தம்.

இத்தகைய அழுத்தங்கள் மாணவர்கள் மத்தியில் உலா வரும் நிலையில்,  அவற்றிலிருந்து விடுபட்டு தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து மனநல மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்குகின்றனர்.  அவை என்னென்ன என்று விரிவாக பார்க்கலாம்.

“எக்ஸாம், எக்ஸாம் என்ற பதற்றத்தை மனதுக்குள் வைத்துக்கொள்ளக் கூடாது. உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.  உடலும் மனதும் சீராக இருந்தால் தான், தேர்வை நிதானமாக எழுத முடியும்.  சத்தான உணவுகளை உட்கொண்டு,  சரியான நேரத்தில் தூங்க வேண்டும்.  தூக்கம், சாப்பாடு என அனைத்தையும் மறந்து படித்துக்கொண்டே இருந்தால்,  தேர்வு அறையில் மயக்கம் தான் வரும்.  தேர்வை கவனத்துடன் எழுத முடியாது.  கடைசி நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டு,  தினமும் கொஞ்சம் கொஞ்சம் என அனைத்தையும் தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாகவே ரிவைஸ் செய்ய வேண்டும்.  தேர்வு எழுதி முடித்தபின் வினாத்தாளை வைத்து மதிப்பிடக்கூடாது.  அது தேவையற்ற மன அழுத்தத்தை கொடுக்கும்.  எத்தனை கேள்விகள் சரி,  எத்தனை கேள்விகள் தவறாக எழுதி இருக்கிறோம் என ஆராய்ந்து பார்க்காமல்,  அடுத்த தேர்வுக்கு தயாராக வேண்டும்.”மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் அறிவுரைகளை வழங்குகின்றனர்.

“மற்ற குழந்தைகளோடு உங்கள் குழந்தையை ஒப்பிட வேண்டாம்.  முக்கியமாக பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன்.  உங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்க வேண்டாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்ற அழுத்தத்தை அவர்கள் மீது இப்போதே திணிக்காமல்,  ரிசல்ட் எப்படி வந்தாலும் பரவாயில்லை,  தைரியமாக போய் எழுது என தோளில் தட்டிக்கொடுங்கள்.  பிள்ளைகளை தைரியமாக வைத்துக்கொள்ள இவற்றை செய்ய வேண்டும்.”

உயர்கல்விக்கு மதிப்பெண்கள் முக்கியம் என்றாலும்கூட,  மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை ஒவ்வொரு மாணவரும் புரிந்துகொள்ள வேண்டும். வெற்றியாளர்கள் மதிப்பெண்களால் அன்றி திறமையினாலேயே அந்த வெற்றியை பெற்றிருப்பர்.  எனவே மதிப்பெண்கள் பற்றிய தேவையற்ற பயத்தையும், பதற்றத்தையும் தவிர்த்து, தேர்வுகளை தைரியமாக எழுதினால் வெற்றி நிச்சயம்...!

Tags :
Advertisement