மணிப்பூரில் 3 மணி நேர பயணம் மூலம் பிரதமர் மோடி என்ன சாதிக்க விரும்புகிறார்..? - ஜெய்ராம் ரமேஷ் சாடல்!
மணிபூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இரு இனக் குழுக்களுக்கு இடையே பெரும் வன்முறை வெடித்தது. இதில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். மணிப்பூரில் முதல்வர் என். பிரேன் சிங் பிப்ரவரி மாதம் பதவி விலகியதை அடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு செப்டம்பர் 13 ஆம் நாள் பயணம் மேற்கொள்ள விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமரின் மணிப்பூர் பயணத்தை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"செப்டம்பர் 13 ஆம் தேதி மணிப்பூருக்கு பிரதமர் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை அவரது ஆதரவாளர்கள் வரவேற்று வருகின்றனர். ஆனால், அவர் மாநிலத்தில் சுமார் 3 மணிநேரம் மட்டுமே செலவிடுவார் என்று தெரிகிறது. இவ்வளவு அவசரமான பயணத்தால் அவர் என்ன சாதிக்க விரும்புகிறார்? இது உண்மையில் 29 மாதங்களாக வேதனைகளுடன் அவருக்காகக் காத்திருந்த மாநில மக்களுக்கு ஒரு அவமானமாகும். மணிப்பூர் மக்கள் மீதான தனது அலட்சியத்தையும் உணர்வின்மையையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ள பிரதமர் செப்டம்பர் 13 ஆம் தேதி உண்மையில் ஒரு பயணமாக இருக்காது”
என்று தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் கலவரம் நிகழ்ததில் இருந்தே பிரதமர் மோடி அங்கு செல்ல வில்லை என காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் விமர்சித்து வந்தனர்.