”தகுதியான ஒரு சட்டத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தால் என்ன செய்வது..?” - உச்ச நீதிமன்றம் கேள்வி!
உச்ச நீதிமன்றத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் மற்றும் குடியரசு தலைவர் விளக்கம் கோரிய மனு மீது மூன்றாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது.
அப்போது மத்திய அரசு தரப்பு,
”ஒரு மசோதா மீது அமைச்சரவையின் ஆலோசனையின் படி ஒப்புதல் கொடுப்பதாக குடியரசுத் தலைவர் முடிவு செய்கிறார் என்றால் எப்படி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தார் என்பதற்குள் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேபோல்தான் மசோதாவை திரும்ப அனுப்பும் போதும் கேள்வி எழுப்ப முடியாது நீதித்துறை மூலம் இது போன்ற தீர்வுகளையும் கேள்விகளையும் எழுப்ப வகை படுத்தப்படவில்லை.குறிப்பாக அரசியல்சாசன பிரிவு 163 அவ்வாறான தலையீட்டை தடுக்கிறது. தமிழ்நாடு விவகாரத்தில் உச்சநீதிமன்றமானது மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. குறிப்பாக அரசு இதழில் அது தொடர்பான அறிவிப்பு வெளியான போது உச்ச நீதிமன்றம் மசோதாவை சட்டமாக்கி உத்தரவு பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதா விவகாரத்திலும் எங்கு முறையிட வேண்டுமோ அங்குதான் சென்று மசோதா ஒப்புதல் தொடர்பாக பேச வேண்டுமே தவிர அனைத்திற்கும் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணக்கூடாது, அவரவர் எல்லையில் அதற்கான தீர்வை தேட வேண்டும்” என்று வாதிட்டனர்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள்,
ஒப்புதல் அளிப்பது என்பது நீதிக்கு உட்பட்டது தான், மேலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய அந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டியது கட்டாயம் அதை தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். ஒவ்வொரு முறையும் இதுபோன்று நீதித்துறை மூலமாக தீர்வு காண வேண்டியதில்லை. மாறாக இதற்கு அரசியல் ரீதியாகவும் தீர்வு காண நமது அரசியல் சாசனம் வழி வகுத்துள்ளது. மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு அரசியலமைப்பு பிரிவு 200 படி எல்லையற்ற அதிகாரம் உள்ளது.மசோதா மீது ஆளுநர் நீண்ட காலம் முடிவெடுக்காமல் இருந்தால் ,அது நீதி துறையின் விசாரணை எல்லைக்கு அப்பாற்பட்ட விவகாரமா?ஆளுநருக்கு அரசியலமைப்பு பிரிவு 200 படி ஆளுநருக்கு எல்லையில்லாத அதிகாரம் இருக்கிறது என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாதுகாப்பது யார் ?ஆளுநருக்கு அரசியலமைப்பு பிரிவு 200 படி எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயலற்றதாகிவிடாதா ? மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருந்தாலும் அவர்கள் செயல்படவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு தலையிட அதிகாரம் இல்லையா? தகுதியான ஒரு சட்டத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தால் என்ன செய்வது? மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநருக்கு எங்கே Immunity இருக்கிறது? விதிகளின் படி ஆளுநர் செயல்படவில்லை என்றால் அது சட்டமன்றத்தை முழுமையாக செயலிழக்க செய்யுமே ? என்று அடுக்கடுகடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
தொடர்ந்து குடியரசு தலைவர் விளக்கம் கோரிய மனுவில் நீதிபதிகள், ”மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தீர்ப்பதற்கு அரசியலமைப்பின் பிரிவு 131-ன் கீழ் SUIT வழக்குத் தொடருவதைத் தவிர வேறு வழிமுறை இல்லையா ? அல்லது அவ்வாறு பிரச்சனைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றத்தின் வேறு அதிகார வரம்பை அரசியலமைப்பு தடைசெய்கிறதா? இந்த கேளவிக்கு விடை கொடுக்க வேண்டுமா.?”
”மாநில ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்காகவோ அல்லது வேறு முடிவுக்காக ஒதுக்கும்போது அது தொடர்பாக அரசியல்சாசன பிரிவு 143ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் கருத்தைப் பெற குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா? என்ற இந்தக் கேள்விக்கு பதில் வேண்டுமெனில் நாம் தற்போதைய பணிகளை நிறுத்திவிட்டு பெரிய அரசியல்சாசன அமர்வு அமைத்து பிரிவு 143ன் உட்பிரிவு 5ன் கீழ் குடியரசு தலைவருக்கு ஆலோசனை வழங்க வேண்டியிருக்கும்” என கருத்து தெரிவித்தனர்.
மேலும் வழக்கு மீதான விசாரணை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.