நடிகை நஸ்ரியாவுக்கு என்ன ஆனது?... இன்ஸ்டா பதிவால் குழம்பும் ரசிகர்கள்!
தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நஸ்ரியா நசீம், பிரபல நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நீண்ட நாள்களாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளாதது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் நஸ்ரியா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“நீங்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறீர்கள் என நம்புகிறேன். நான் சில நாள்களாக பொதுவெளியில் வராதது தொடர்பாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக மன ரீதியிலான பிரச்னைகள் மற்றும் தனிப்பட்ட சவால்களுடன் நான் போராடி வருகிறேன். எனது 30-வது பிறந்த நாள், புத்தாண்டு மற்றும் சூட்சம தர்ஷினி படத்தின் வெற்றிவிழா மற்றும் பல முக்கியமான தருணங்களை கொண்டாடுவதை தவறவிட்டேன்.
நான் பொதுவெளியில் வராதது தொடர்பாக விளக்கம் அளிக்காததற்கும், அழைப்புகளை எடுக்காததற்கும், செய்திகளுக்கு பதிலளிக்காததற்கும் அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருந்துகிறேன். நான் முழுமையாக முடங்கியிருந்தேன். பணி நிமத்தமாக என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்த சக ஊழியர்கள் அனைவரிடமும் மன்னிப்புகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு நான் வருந்துகிறேன்.
சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருது எனக்கு கிடைத்ததைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து அங்கீகாரத்திற்கும் மிக்க நன்றி மற்றும் சக வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த கடினமான பயணத்தில் நாளுக்குநாள் குணமடைந்து வருகிறேன். உங்கள் புரிதலையும், ஆதரவையும் நான் பாராட்டுகிறேன். முழுமையாக மீள இன்னும் சில நாள்கள் ஆகலாம். ஆனால், மீள்வதற்கான பாதையில் இருக்கிறேன் என்பதை உறுதி செய்கிறேன்.
உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் மீண்டும் இணைகிறேன். உங்களின் எல்லையில்லா ஆதரவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.