மக்களவையில் நடந்தது என்ன? - தமிழ்நாடு எம்.பி.க்களின் பிரத்யேக தகவல்!
மக்களவையில் புகைக்குப்பிகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் அளித்த பிரத்யேக தகவலை இங்கே காணலாம்...
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென குதித்த 2 பேர், இருக்கைகளின் மீது ஏறி சபாநாயகர் மாடத்தை நோக்கி ஓட முயற்சித்தனர். கண்ணீர் புகை குப்பிகளை வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்த காவலர்கள் கைது செய்தனர்.
அதேபோல் நாடாளுமன்றத்தின் வளாகத்திலும் கண்ணீர் புகை குப்பிகளை வீசிய இருவரை காவலர்கள் கைது செய்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் இந்த சம்பவத்தில் கைதாகினர்.
கார்த்தி சிதம்பரம் தொலைபேசியில் அளித்த பேட்டி
“மக்களவையில் பார்வையாளர் மாடத்திலிருந்து 2 இளைஞர்கள் திடீரென குதித்து, அவர்கள் வைத்திருந்த குப்பிகளை சபையினுள் வீசினர். அவர்கள் வீசிய அந்த புகை குப்பிகள் விஷமாகக் கூட இருந்திருக்கலாம். 2001-ம் ஆண்டு டிச.13-ம் தேதி நாடாளுமன்றம் தாக்கப்பட்ட இதே நாளில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது ஒரு கடுமையான பாதுகாப்பு மீறல்” என்று காங். எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன் தொலைபேசி வழியே அளித்த பேட்டி
இந்த சம்பவம் தொடர்பாக விவரித்த சு.வெங்கடேசன் எம்.பி.. “பார்வையாளர் மாடத்திலிருந்து ஒருவர், தவறி விழுந்ததாக முதலில் நினைத்தோம். பின்னர் அந்த நபர் இருக்கைகளின் மீது ஏறி ஓடத்தொடங்கினார். அதன் பின்னரே நிலைமையை யூகிக்க முடிந்தது. அவரை எம்பிக்கள் அனைவரும் மடக்கிப் பிடித்தனர். அந்த நபர் புகைக்குப்பிகளை கையில் வைத்திருந்தார்” என்று தெரிவித்தார்.