சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!
சட்டப்பேரவையில் சபாநாயகர் நடந்துகொண்ட விதம், அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்துவிட்டதாக ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. சட்டமன்றத்துக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மரபுப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் அனைவருக்கும் தமிழில் வணக்கம் தெரிவித்து தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "பிணியின்மை, செல்வம், விளைவின்பம், ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து” என்ற திருக்குறளை வாசித்தார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர், நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது தொடர்ச்சியான கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதாக அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து, மக்களின் நன்மைக்காக ஆக்கப்பூர்வமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் அவையில் நடைபெற வேண்டும் என்று கூறிய ஆளுநர், 'வாழ்க தமிழ்நாடு வாழ்க பாரதம்' என்று தெரிவித்து இரண்டே நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார்.
“தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு புறம்பான பல்வேறு கருத்துகள் இடம் பெற்றிருந்தன. தனது உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சருக்கும் சபாநாயகருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பலமுறை கடிதம் எழுதியிருந்தார். ஆனால், தமிழ்நாடு அரசு, ஆளுநரின் அறிவுரைகளை புறக்கணித்தது.
இதையும் படியுங்கள் : வரும் 22-ம் தேதி வரை சட்டப் பேரவைக் கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை பிரதிபலிப்பதற்கு பதில், ஆளுநர் உரையில் தவறான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. ஆதலால், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்கவில்லை. பின்னர், சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையை வாசித்தார். அந்த உரை முடியும் வரை ஆளுநர் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தார். உரையை சபாநாயகர் முடிக்கும் போது, தேசியகீதத்திற்காக ஆளுநர் எழுந்தார். அப்போது வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் ஆளுநரை சபாநாயகர் அப்பாவு விமர்சிக்கத் தொடங்கினார். சபாநாயகரின் செயல்பாடு அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்துவிட்டது.”
இவ்வாறு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.