ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? நிர்வாகம் விளக்கம்...
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வெளிமாநில பக்தர்கள், மற்ற பக்தர்களை தரிசனம் செய்யவிடாமல் கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று தொடங்கி ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 7 மணியளவில் ஸ்ரீரங்கம் காயத்ரி மண்டபத்தின் அருகில், பக்தர்கள் வரிசையில் ஆந்திராவைச் சேர்ந்த 34 நபர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
கோயில் சார்பில் கூறப்பட்டதாவது:
”அங்குள்ள உண்டியலை மிகுந்த ஓசையுடன் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோசமிட்டு உண்டியலை பிடித்து ஆட்டியுள்ளார்கள். இதனிடையே அங்கு வந்த திருக்கோயில் பணியாளரை தலை முடியை பிடித்து இழுத்து, அவரை உண்டியலில் மோதச் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு காவலர் ஒருவர் வந்துள்ளார். அப்போது “போலீஸ் டவுன், டவுன்” என அவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.
மேலும் அவர்கள், மற்ற பக்தர்கள் யாரையும் தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மற்ற பக்தர்கள், உடனே ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.” என கூறப்பட்டுள்ளது.