2023-ல் விஜய் மக்கள் இயக்கம் செய்த பணிகள் என்னென்ன..?
2023 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் தமிழ்நாடு மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
2023 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர்.அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில், இந்தாண்டு விஜய் மக்கள் இயக்கம் மேற்கொண்ட பணிகள், முன்னெடுப்புகள் பற்றி விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.
தளபதி விஜய் நூலகம்பள்ளி மாணவர்களிடத்தில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் துவங்கப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, அரியலூர், நாமக்கல், வேலூர், நெல்லை, கோவை, ஈரோடு, தென்காசி, சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டுள்ளன.
தளபதி விஜய் பயிலகம்முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் 'தளபதி விஜய் பயிலகம்' தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை, கன்னியாகுமரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ,விழுப்புரம், சென்னை, சேலம், கோவை, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடங்கப்பட்டன. மேலும் தமிழ்நாடு முழுவதும் ‘தளபதி விஜய் பயிலகம்’ திறக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
விஜய் கல்வி விருது வழங்கும் விழாநடிகர் விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழுடன் ஊக்கத்தொகையும் வழங்கினார். மேலும், 5,000 பேருக்கு காலை மற்றும் மதிய உணவு, வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள், பெற்றோர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவ முகாம்மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, சென்னையில் 25 இடங்களில் டிசம்பர் 14 ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
தென் மாவட்டங்களில் நிவாரணம்தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் டிசம்பர் 30 ஆம் தேதி வழங்கப்பட்டன. அதில் கிட்டத்தட்ட 1,500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவியை விஜய் வழங்கினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும் வழங்கினார்.