மேற்கு மண்டல மக்களுக்கு அதிமுக செய்தது என்ன? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
மேற்கு மண்டலத்தை தனது கோட்டை என்று சொல்லும் அதிமுக அங்குள்ள மக்களுக்கு என்ன செய்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த அவர், நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது :
“நம் மண்ணை, தமிழை, பண்பாட்டை, வரலாற்றை பழிப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் ஒரு கோப்பில் கையெழுத்து போடுகிறேன் என்றால் கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று பொருள். அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய ஆட்சி திமுக ஆட்சி.
10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடத்தியது. நான் சொன்னதைப் போன்று அவர்களது ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட முடியுமா? மேற்கு மண்டலத்தை அதிமுக தனது கோட்டை என்று சொன்னது. வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஏதாவது செய்ததா? மேற்கு மண்டலத்துக்கு அவர்கள் செய்தது என்ன?
இதையும் படியுங்கள் : “கடைக்கோடி மக்களிடம்கூட பேசும் முதலமைச்சர் நான்தான்” - பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். குட்கா, கஞ்சா, மாமுல் போன்ற குற்றப் பட்டியலில் அமைச்சரும், டிஜிபியும் இருந்தது அதிமுக ஆட்சியில் தான். அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்ய விடாமல் தடுத்த கூட்டணி தான் இன்று உத்தமர் வேஷம் போடுகின்றது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிரான அதிமுக - பாஜக கூட்டணி ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் தமிழர்களுடைய உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக சக்திகளும், திமுகவும் ஒற்றுமையாக இருக்கிறோம்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.