காந்தி நினைவிடத்தின் பார்வையாளர் பதிவேட்டில் அதிபர் புதின் எழுதியது என்ன..? - வெளியான தகவல்...!
ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை நேற்று மாலை மாலை புதுதில்லியில் உள்ள விமான நிலையத்தில் இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். இதையடுத்து இரு தலைவர்களும் பிரதமர் இல்லத்தில் ஒரே காரில் ஒன்றாக பயணம் செய்தனர். அங்கு புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். இரவு விருந்துக்குப்பின் புதினுக்கு பகவத் கீதையை பிரதமர் மோடி பரிசளித்தார்.
இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் 23வது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.
முன்னதாக இன்று காலை அதிபர் புதின் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்றார். அங்கு காந்தியடிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர் அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் ரஷ்ய மொழியில் ஒரு குறிப்பை எழுதினார். அக்குறிப்பில், "அகிம்சை மற்றும் உண்மை மூலம் நமது பூமியில் அமைதிக்காக மகாத்மா காந்தி விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்தார். மகாத்மா காந்தி ஒரு புதிய, நியாயமான, பன்முக உலக ஒழுங்கை நோக்கிய பாதையைக் காட்டினார், அது இப்போது உருவாகி வருகிறது.
இந்தியா இன்று உலக மக்களுடன் சேர்ந்து சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு பற்றிய அவரது போதனைகளை, சர்வதேச அரங்கில் இந்தக் கொள்கைகளையும் மதிப்புகளையும் பாதுகாக்கிறது. ரஷ்யாவும் அதையே செய்கிறது" என்று எழுதியுள்ளார்.
